Also Watch
Read this
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்கள் உழைப்பில் வெற்றி பெற்று ஈசியாக ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தால் குதிரைபேரம் என்றுதானே சொல்ல முடியும்," என காரசாரமாக பேச, "உங்கள் தலைமை மீது நம்பிக்கை இருந்திருந்தால் ஏன் அவர்கள் தவெகவில் இணைய போகிறார்கள்?" என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலடி கொடுத்தார். தன்கூட்டு கிளிகள் வேறுகூட்டுக்கு பறந்ததை இபிஎஸ் சோகமாக சுட்டிக்காட்டிய நிலையில், "திமுக வேறு, அதிமுக வேறு, வேறு யாருடனும் நாங்கள் சேர வேண்டிய அவசியமில்லை," என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் தன்பங்குக்கு அவை கவனத்தை தன்பக்கம் திருப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
2026-2027ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது, "யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது” என்ற கேப்ஷனை போட்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’ஒரு கட்சியில் எம்எல்ஏக்கள் வெற்றி பெறுகிறார்கள், உடனே ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருகிறார்கள், இதை என்ன சொல்வது? குதிரை பேரம் என்றுதானே சொல்ல வேண்டும், இதுதான் தவெக அரசின் குறிப்பிடத்தக்க சாதனையே’ என கூறினார்.

நம்பிக்கை இருந்திருந்தால்...
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 2017ஆம் ஆண்டுக்குப்பிறகு அமைந்துள்ள அதிமுகவிற்கும் தங்களுக்கும் உடன்பாடு இல்லை, ஏனெனில் அது அம்மாவின் அதிமுகவே இல்லை என தெரிவித்தார். உங்கள் மீதும், உங்கள் தலைமை மீதும் நம்பிக்கை இருந்திருந்தால் ஏன் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய போகிறார்கள் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

கூச்சல், குழப்பம்
அவரது பேச்சால் டென்ஷன் ஆன அதிமுகவினர் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தளவாய் சுந்தரம், சுப்ரமணியம் , அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் சத்தம் அதிகமாக கேட்க, இருக்கையைவிட்டு எழுந்து நின்ற சபாநாயகர் அமைதியாக அமருமாறு தனது குரலை உயர்த்தினார். அப்படியும் சத்தம் குறையாததால் முக்கூர் சுப்பிரமணியனை எச்சரித்தார் சபாநாயகர். அதோடு, நீங்கள் இருவரும் சேர்ந்து பேசுவது தனக்கு தெரியும் என கூறினார். அப்போது திமுக, அதிமுக என இருகட்சியினரும் சேர்ந்து கூச்சலில் ஈடுபட, அதிமுக உறுப்பினர்கள் அவர்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும் போது, வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர் மீண்டும் குதிரைபேரம் என்ற வார்த்தையை சொன்னால் இரண்டு பேரும் சேர்ந்து பேசுகிறீர்கள் என்று சொல்வதில் தவறில்லை என விளக்கமளித்தார் சபாநாயகர்.

திமுக வேறு, அதிமுக வேறு
இதற்கு மத்தியில் பேச எழுந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுக வேறு, அதிமுக வேறு, நாங்கள் இருவரும் ஒன்றாக வேண்டிய அவசியமே இல்லை எனவும் திமுகவும் ஆண்ட கட்சி, அதிமுகவும் ஆண்ட கட்சி, அடுத்த முறை ஆளலாம் என்று திட்டம் போட்டுள்ள கட்சி என்றும் பேசினார்.

எந்தக் காலத்திலும்...
இதனை தொடர்ந்து பேசிய இபிஎஸ், ஒரு எம்எல்ஏ வெற்றி பெறுவதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது? அதை மறந்துவிட்டு அசால்டாக ராஜினாமா செய்தால் தொண்டர்கள் மனம் எப்படி கொதிக்கும்? இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என தன்கூட்டு கிளிகள் வேறுகூட்டுக்கு பறந்ததை சோகமாக சுட்டிக்காட்டினார். அந்த கொதிப்பில் தான், தன் மனதில் உள்ளதை கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறிய இபிஎஸ், நாங்கள் எந்த காலத்திலும் ஒன்று சேரவில்லை என்றார்.
அதற்கு, இருவரும் ஒன்று சேர்ந்தீர்கள் என்பதற்கு வேறு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved