காங்கிரஸ் தலைமையிலான, இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாவின் கருத்து கூட்டணிக்குள் மேலும் பிளவு ஏற்படுவதை உறுதி செய்திருக்கிறது. உமரின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆமோதித்திருக்கும் சூழலில், இந்தியா கூட்டணி வெகுவிரைவில் சுக்குநூறாக உடையலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.கழுதை தேய்ந்து, கட்டெறும்பாய் போன கதையாக தான், இந்தியா கூட்டணியும் தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து கொண்டே போகிறது என்று கூறலாம். கட்டெறும்பு கூட சற்று சுறுசுறுப்பாக தான் ஓடும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ கும்பகர்ணன் தூக்கத்தை விடுவதாக தெரியாததால், உடனிருக்கும் கட்சிகளே ஒவ்வொன்றாக கழன்று கொள்ளும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறது.2014 ஆண்டு வாங்கிய மரண அடியிலிருந்து மீள முடியாமல் சொல்லண்ணா துயரில் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த எனர்ஜி டிரிங்க்ஸ் தான் இந்தியா கூட்டணி. தோல்வியிலிருந்து இனி மீளவே முடியாது என்று நினைத்த காங்கிரசின் கரம் பற்றி, கூட்டணியை கட்டமைத்து அக்கட்சிக்கு புத்துயிர் அளித்ததே மாநிலக் கட்சிகள் தான்.அப்படிப்பட்ட மாநிலக் கட்சிகளுக்காகவாவது ஓடோடி உழைக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, வழக்கம் போல மந்தத்தில் மல்லாந்து படுத்துக் கொண்டிருப்பது உடனிருக்கும் கட்சிகளை உசிப்பேற்றியிருக்கிறது. மக்களவை தேர்தலுக்கே இப்படி என்றால் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கு சொல்லவா வேண்டும்? மாநில கட்சிகள் மாங்கு மாங்கு என உழைத்தால், காங்கிரஸ் கட்சியோ கோஷ்டி சண்டையில் மும்முரமாக இறங்கி தனிலாபி செய்து கொண்டிருக்கும் என்பதே எழுதப்படாத விதி.காங்கிரஸ் தலைமையின் தொடர் தோல்விகளால், பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயிருக்கும் கூட்டணி கட்சிகள், பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னராக முற்றிலுமாக கூட்டணியிலிருந்து கழண்டு விட காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸை விட்டால் பாஜக தான் சாய்ஸ் எனும் போது அங்கே செல்வதற்கு தயங்கி கொண்டிருக்கும் சில கட்சிகள், பல்லைக் கடித்துக் கொண்டு சம்பிரதாயத்துக்கு மட்டுமே இண்டியா கூட்டணியில் நீடிக்கிறது என்றே சொல்லலாம். பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அதீத நம்பிக்கையில் வழக்கம் போல் ராகுலை தவிர அந்த கட்சியினர் மிதப்பில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், உடனிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டுமே ஓய்ந்து ஓய்ந்து வேலை செய்து கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு கடுப்பாகியிருக்கும் கூட்டணி கட்சிகள் தற்போது காங்கிரசுக்கு எதிராக வன்மத்தை கக்க தொடங்கியுள்ளன.ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சரும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, இந்தியா கூட்டணி வெண்டிலேட்டரில் இருப்பதாகவும் காங்கிரஸ் கூறும் வாக்கு திருட்டு, இவிஎம் முறைகேடு போன்றவற்றில் தமக்கு உடன்பாடில்லை என்றும் தடாலடியாக தெரிவித்துள்ளார். பாஜக உழைப்பது போல் எதிர்க்கட்சிகள் உழைப்பதில்லை என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.உமரின் இந்த கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, எந்த ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்யவில்லை என்றும், கூட்டணியை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் போன்றவற்றில் குறைபாடு இருப்பதாகவும், தேர்தல் தோல்விகளிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை என்றும் சாடும் ராஜா, இந்தியா கூட்டணி தொடங்கப்பட்டதன் நோக்கத்தின் அடிப்படையில் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.ஏற்கனவே அரவிந்த கெஜ்ரிவால், மமதா பானர்ஜி போன்றவர்கள் இந்தியா கூட்டணியை விட்டு விலகியிருக்கும் நிலையில், ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த ஹேமந்த் சோரனும் இன்றோ நாளையோ என்ற நிலையில் தான் உள்ளார். போதாக்குறைக்கு ஆள்வதே மூன்று மாநிலங்கள் தான் என இருக்கும் சூழலில், கர்நாடகத்தில் கோஷ்டி மோதலில் ஆட்சி அந்தரத்தில் தொங்குகிறது எனலாம். இப்படி ஒரு பரிதாப நிலையில் உள்ள காங்கிரஸ் இனியாவது விழித்துக் கொண்டு செயல்படுமா அல்லது வழக்கம் போல் கோட்டைவிட்டு விட்டு குறட்டை விடுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.