Also Watch
Read this
பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று, உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருப்பதாக தவெக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தூய சக்தியா இல்லை, அடுத்த கட்சி MLAக்களைத் தூக்குற சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி விட்டதாக சாடி உள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
தவெக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து உள்ளனர். சட்டமன்றத்தில் இருக்கும் தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

நிலைப்பாட்டை மதிக்கிறோம்
இ.கம்யூ., மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தோழமைக் கட்சிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரது நம்பிக்கையை சிதைக்கும் வேலையில் தவெக இறங்கி உள்ளது.

Clean Politics vs Dirty Politics
இதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும் தான். ஆட்சி நிலைக்க தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics என்று கூறி, ஆட்சிக்கு வந்தவர்கள் Dirty Politics செய்து உள்ளனர்.

இது தூய சக்தியா?
பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி உள்ளனர். உங்களோட Starting இப்படி இருந்தால் Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா? இல்லை அடுத்த கட்சி எம்எல்ஏக்களைத் தூக்கும் சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி உள்ளது.

ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக...
முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பிளவுபட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு, என்ன Return Gift கொடுக்கப் போகிறீர்கள்? என்பதையும் மக்கள் பார்க்கத் தான் போகின்றனர். எங்களைப் பொறுத்தவரை, திமுக தொடர்ந்து தன் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved