Also Watch
Read this
அமெரிக்காவில் உள்ள முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொடுத்திருக்கும் ஷாக் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல், காக்னிசன்ட், கேப்ஜெமினி ஆகிய முன்னணி இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோசாப்ட், அடோப் ஆகிய சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் அதாவது PERM விண்ணப்பங்களை அமெரிக்க தொழிலாளர் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

நடைமுறைகளில் முறைகேடு
விசா நடைமுறைகளில் முறைகேடுகள் மற்றும் உள்ளூர் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த தடையால் ஏற்கெனவே அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கும், அங்குள்ள நிறுவனங்களுக்கும் ஏற்படப்போகும் சிக்கல்கள் என்ன?

எதிர்காலம் கேள்விக்குறி
அமெரிக்க தொழிலாளர் துறை செயலாளர் கீத் சோண்டர்லிங் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அதிரடி உத்தரவு, அமெரிக்காவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
2009ஆம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா மற்றும் கிரீன் கார்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அமெரிக்க அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

அதிரடி நடவடிக்கை
அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த 8 நிறுவனங்கள் தொடர்பான புதிய PERM விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது என்றும், ஏற்கெனவே பரிசீலனையில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அதே பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான H-1B விசாக்கள் மற்றும் PERM விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீது நேரடி குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பான கூட்டாட்சி புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக பாதிக்காது
இந்த தடையின் மூலம் எழும் மிக முக்கிய கேள்வி , H1-B விசாவில் பணியாற்றி வருபவர்களின் நிலை என்ன? என்பதுதான். இந்த இடைக்காலத் தடையானது ஏற்கெனவே பெறப்பட்ட H-1B விசாக்களையோ அல்லது பெறப்பட்ட கிரீன் கார்டுகளையோ உடனடியாகப் பாதிக்காது.
ஆனாலும், H-1B விசாவில் 6 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஊழியர்களுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

நாடு திரும்பும் கட்டாயம்
சாதாரணமாக, H-1B விசாவில் 6 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, PERM அனுமதி நிலுவையில் இருந்தாலோ அல்லது அங்கீகரிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே விசா காலத்தை நீட்டிக்க முடியும். தற்போது PERM சான்றிதழ் வழங்கும் நடைமுறை முடங்கியுள்ளதால், 6 வருட விசா வரம்பை எட்டும் இந்திய ஊழியர்கள் தங்களது விசா காலத்தை நீட்டிக்க முடியாமல் தாய்நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என குடிவரவு சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அடுத்த கட்ட முடிவென்ன?
மேலும், ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் இந்திய அலுவலகங்களிலிருந்து அமெரிக்காவிற்கு ஊழியர்களை அனுப்பும் நடைமுறைகளிலும் மந்தநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஷேர் மார்கெட்டில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு தரப்பில் எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட முடிவுகள் என்ன? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved