Also Watch
Read this
’சிக்மா’ பட இசை வெளியீட்டு விழாவின் போது படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஜேசன் சஞ்சய், தனது தந்தை இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பதாக கூறி, அவருக்கும் நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அக்.2ல் சிக்மா
சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைத்து உள்ளார். சிக்மா திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை வெளியீட்டு விழாவில்...
சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் ஜேசன் சஞ்சய் பேசியதாவது:
அனைவரது வாழ்விலும் நிச்சயம் ஒரு ’சிக்மா’ நிகழ்வு நடந்திருக்கும். அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு தேவை அல்லது தர்ம சங்கடமான ஒரு பிரச்னை இருக்கும்.

அந்த நேரத்தில் எடுக்கும் ஒரு முக்கியமான முடிவால் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறும். அப்படிப்பட்ட ஒரு திருப்புமுனைப் பயணம் தான் 'சிக்மா' திரைப்படம். இயக்குநராக எனக்கு இது முதல்படம் என்பதால், என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான, என்றும் மறக்க முடியாத ஒன்று.

அனைவருக்கும் நன்றி
என்ன நம்பி, இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வாய்ப்பை வழங்கிய லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

நடிகர் சந்தீப் கிஷன், கதைக்கு உயிர் கொடுத்து, மிகச்சிறந்த உழைப்பை வழங்கிய இப்படத்தின் நாயகனுக்கு நன்றி. இசையமைப்பாளர் தமன் உடன் இணைந்து பணியாற்றியது ஒரு அற்புதம்.

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களை மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார். பாடலாசிரியர்கள் விவேக், சுப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

நடிகர் சூரி...
நடிகர் சூரியின் அசாத்திய வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. அவர் பலருக்கு ஒரு பெரிய உத்வேகம்.

நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த உடனே, என் சினிமா கனவுகளுக்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது என்னுடைய சித்தப்பா Creative Producer சஞ்சீவ் தான். என் வாழ்க்கையில் நான் அதிகமாக நம்பும் ஒரே ஆள் அவர்தான். இந்த திரைப்படப் பயணத்தில் என்னை முழுமையாக வழி நடத்தியது அவரே.

முதல்வர் விஜய்க்கு...
என்னுடைய சினிமா ஆசைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் நண்பர்களுக்கும், எனது அன்பு அம்மாவுக்கு நன்றி. என்னுடைய செல்ல தங்கை திவ்யா சாஷா, அவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய அப்பா இன்றைக்கு முதலமைச்சர், அவருக்கும் எனது மிகப்பெரிய நன்றிகள்.

ஆதரவை தர வேண்டும்
படக்குழுவினர் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்து இந்த ஆக்சன் த்ரில்லர் படத்தை உருவாக்கி உள்ளோம். 'சிக்மா' திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குக்கு வந்து பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும்.
இவ்வாறு ஜேசன் சஞ்சய் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved