Also Watch
Read this

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்து உள்ளார். ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் அதிகபட்சமாக 16 கோல் அடித்துள்ள நிலையில், சமன் செய்து அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார்.

ஹாட்ரிக் சாதனை...
கன்சாஸ் சிட்டியில் உள்ள கேஹா ஃபீல்ட் அட் அரோஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், லியோனல் மெஸ்ஸி, மேஜிக் ஹாட்ரிக் சாதனையால், அல்ஜீரியா அணியை அர்ஜெண்டினா அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து உள்ளது. லியோனல் மெஸ்ஸி, தமது அதிரடி ஆட்டத்தின் 17, 60 மற்றும் 76ஆவது நிமிடத்தில், ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து உள்ளார். மெஸ்ஸி அடித்த 3 கோல்களால், உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையான 16 கோல்களை சமன் செய்தார்.

ஆட்டமா, தேரோட்டமா?
* போட்டி தொடங்கி, முதல் கோலை மெஸ்ஸி அடித்தார். ஆனால், வலது புற லைன் நடுவர் அதை ஆஃப் சைடு என்றார். அதே போல் அல்ஜீரியா வீரர் ஃபரேஸ் சைபி அடித்த கோலும் ஆஃப் சைடினால் பறிபோனது.
* போட்டியின் முதல் பாதியில் பெனால்டி பரப்புக்கு வெளியே இருந்து இடது காலால் துல்லியமான ஷாட் அடித்து மெஸ்ஸி, அர்ஜென்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
* ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்திலேயே அவர் கோல் அடித்தார்.
* சக வீரரான ரோட்ரிகோ டி பால், 40 அடி தொலைவில் இருந்த மெஸ்ஸியிடம் பந்தை தள்ளினார், மெஸ்ஸி அதை திரும்பி, தடுப்பாட்டக்காரர்கள் யாரும் இல்லாத நிலையில், பெனால்டி ஏரியாவின் விளிம்பில் இருந்து அவர் உதைத்த பந்து, அல்ஜீரியா கோல் கீப்பர் லூகா ஜிதானைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது. பந்து அவரது விரல் நுனியில் பட்டு வலைக்குள் சென்றது.

தொடர்ந்து 2, 3 என...
* அன்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல், அவரது முதல் கோலை விடவும் மிக எளிதாக அமைந்தது.
* அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 30 அடி தொலைவில் இருந்து அடித்த பந்தை கோல் கீப்பர் ஜிடேன் தடுத்தபோது, அது நேராக மெஸ்ஸியின் காலடியில் வந்து விழுந்தது, 60ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மிக நிதானமாக பந்தை வலைக்குள் செலுத்தினார்.
* தொடர்ந்து, 76ஆவது நிமிடத்தில் ஜாம்பவான் மெஸ்ஸி தனது தனித்துவமான பாணியில் மிக நேர்த்தியாக பந்தை அடித்தார். மூன்று தடுப்பு ஆட்டக்காரர்களுக்கு இடையேயும், ஜிடேனின் கைக்கு எட்டாத வகையிலும் பந்து, ஊடுருவிச் சென்றது.

எழுந்து நின்று கை தட்டிய ரசிகர்கள்
மெஸ்சி ஆட்டத்தில் இருந்து பலத்த கரகோஷங்களுக்கு இடையே வெளியேறினார். உலகக் கோப்பையின் 5 வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அப்போது, ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

இந்த வெற்றியால், உலக கோப்பை போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்கள் பட்டியலிலும் மெஸ்ஸி, ஜெர்மனி வீரர் குளோஸுடன் இணைந்து 17 வெற்றிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து உள்ளார். உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் கோல் அடித்த மெஸ்ஸியின் அபாரமான ஆட்டம் தொடர்கிறது.

மெஸ்சியின் கால்பந்து வாழ்க்கையில்...
மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் 11ஆவது ஹாட்ரிக் இது. உலகக் கோப்பை தொடரில் அவர் பதிவு செய்த முதல் ஹாட்ரிக் இது. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஹாட்ரிக் அடித்த அதிக வயதுடைய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். இந்தப் போட்டி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கான 200ஆவது சர்வதேச போட்டி. உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு தொடர்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் மெஸ்சி பெற்றார்.

ஒரு நாள் முன்னதாகவே...
இதற்கு முன் 5 உலகக் கோப்பைகளில் விளையாடிய சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அன்டோனியோ கார்பஹால், ஆண்ட்ரெஸ் கார்டாடோ, ரஃபேல் மார்க்வேஸ் (மெக்சிகோ) மற்றும் லோதர் மத்தேயுஸ் (ஜெர்மனி) பகிர்ந்து கொண்டு உள்ளனர். போர்ச்சுகலின் முதல் போட்டியில் காங்கோவுக்கு எதிராக களமிறங்கும் ரொனால்டோ இந்தச் சாதனையை சமன் செய்ய உள்ள நிலையில், மெஸ்ஸி ஒரு நாள் முன்னதாகவே சாதனையைத் தனதாக்கினார்.
மெஸ்சியை வாழ்த்துவோம்...

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved