Also Watch
Read this
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை ஒட்டி, தமிழர் தலைமுறை தலை நிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர்
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம். பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.

பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட. வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்.

களத்தில் நிற்போம், பயணத்தில் வெல்வோம்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறி இருப்பதாவது;
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா விதைத்து, தலைவர் கலைஞர் வளர்த்து, நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்.
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி, சுயமரியாதை தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம், பயணத்தில் வெல்வோம்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved