Also Watch
Read this
சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்தை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ள புதிய திட்டத்தின் கீழ் 9 குடிநீர் ஆதாரங்கள் ஒரு வளையமாக இணைக்கப்படுகின்றன. 98 கி.மீ. தூரத்திற்கு துருப்பிடிக்காத குழாய்கள் பதித்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குடிநீர் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், விழாவின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக மரக்கன்றையும் நட்டு வைத்தார்.

சென்னை சுற்றுக் குழாய் திட்டம்
சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் இன்று அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீர் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.

சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம், சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டபிரதான குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

ரூ.3,108.55 கோடி செலவாகும்
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது.
எனவே, தற்போதுள்ள குடிநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக 3,108.55 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் 3,108.55 கோடி ரூபாயில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வர் விஜய் சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டினார்.

மக்களுடன் மக்களாக முதலமைச்சர்
சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்று மக்களை முதல்வர் விஜய் சந்தித்தார். முதலமைச்சர் நடந்து வந்ததை கண்டதும் சாலையோரத்தில் திரண்டிருந்தவர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, சென்னை துரைப்பாக்கத்தில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved