Also Watch
Read this
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த ஒரு வார காலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழியக் கூடுமென்றும் கூறி உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15ஆம் தேதி கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், மழை பெய்யும் இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடுமென்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
வெயில் வாட்டி வதைத்த சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், பெருநகரில் ஓரிரு இடங்களில் 15ஆம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடுமென்றும் கணித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து நாளை அக்டோபர் 15ஆம் தேதியன்று, முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில், வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வுப்பாதை
மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கிமீ உயரத்தில், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை அக்டோபர் 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இதர மாவட்டங்களான கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கனமழையும் பெய்யக் கூடும்.
இதர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16ஆம் தேதி
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 17ஆம் தேதி
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 18ஆம் தேதி
நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved