Also Watch
Read this
அடுத்த 3 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு என்றும், தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் பரவலான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தம் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தம்
இதுதொடர்பாக, இந்திய வானிலை மையம் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டில், அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நாளை அக்டோபர் 13ஆம் தேதி, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 15ஆம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு இந்திய வானிலை மையம் கூறி உள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு
இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது;
தமிழகத்தில், நாளை அக்டோபர் 13ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில்...
அக்டோபர் 14ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை உண்டு
அக்டோபர் 15ஆம் தேதி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில்...
அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அக்டோபர் 13ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved