Also Watch
Read this
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை இல்லை, வெற்று அறிக்கை என சாடிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கவே அறிக்கை வெளிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், தாம் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் சவால் விடுத்தார்.
இயலாமையை மறைக்க பார்க்கிறது தவெக அரசு
தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது, தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல என்றும், 2001 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், தங்கள் இயலாமையை மூடி மறைக்க, வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க தவெக அரசு, மக்களை ஏமாற்ற இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சாடினார்.

தங்கம் தென்னரசு பகிரங்க சவால்
தவெக ஆட்சி, ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5ஆம் ஆண்டு இறுதியில், தமிழ்நாடு அரசின் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், தாம் பொறுப்பில் இருந்தே விலகிவிடுவதாக சவால் விடுத்தார்.
யாரைக் காப்பாற்ற முயல்கிறது தவெக அரசு?
கடந்த ஆட்சிகளில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை போல் இல்லாமல், திமுக ஆண்ட காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டது ஏன்? என கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சி காலத்தின் விவரத்தை வெள்ளை அறிக்கையில் சொல்லாமல் தவெக அரசு யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்?
மக்கள் நலத்திட்டங்களே செயல்படுத்தப்படாத குஜராத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதா? எனக் கேள்வி எழுப்பிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் கடன் தொகை உயர்வதை தவிர்க்க முடியாது என்றும் பதிலடி கொடுத்தார். வருவாய் பற்றாக்குறை உயர்ந்தது ஏன் என்பது பற்றி வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என தவெக அரசுக்கு வினவிய தங்கம் தென்னரசு, 78,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வர மத்திய அரசு தான் காரணம் என்பதை ஏன் சொல்லவில்லை என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு சவால்
தவெக அரசு முடிந்தால் மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட கட்டாய செலவுகளை நிறுத்திவிட்டு, மேம்பாட்டுக்கான நிதியை அதிகரித்து காட்டுங்கள் பார்போம் என தங்கம் தென்னரசு தெரிவித்தார். நாட்டிலேயே தமிழ்நாடு 2ஆவது பெரிய பொருளாதார மாநிலம் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கூறியதாக தெரிவித்த தங்கம் தென்னரசு, நிதிநிலை மோசம் என்றால் அது எப்படி சாத்தியமானது? என கேள்வி எழுப்பினார்.

மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்-தங்கம் தென்னரசு
திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது எத்தனை நிதி நெருக்கடிகள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என சொன்ன முதல்வர் எங்கே, தற்போது உள்ள நிதிநெருக்கடிகளை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்க பார்க்கும் தவெக அரசின் முதல்வர் எங்கே? என மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved