Also Watch
Read this
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 525 வாக்குறுதிகள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை என்ற மாபெரும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது போல, இந்த தேர்தலிலும் மகளிரை கவரும் விதமாக டிவி, வாஷின் மெஷின், பிரிட்ஜ், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்ற கவர்ச்சியான வாக்குறுதி இடம் பெற்றுள்ளது.

அதிரும் தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில உரிமை, மகளிர் மேம்பாடு, பள்ளிக்கல்வி என 50 தலைப்புகளில், மொத்தமாக 525 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ரூ.8,000 கூப்பன் திட்டம்
இதில், மகளிர் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதமாக இல்லத்தரசி கூப்பன் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வருமான வரி செலுத்தாத அனைத்து இல்லத்தரசிகளுக்கும் எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்க இந்த கூப்பனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்றிக் கொள்ளவும் கூப்பனை பயன்படுத்தலாம் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

மகளிர் உதவித்தொகை ரூ.2,000
அடுத்ததாக பள்ளிக் குழந்தைகளின் பசியாற்ற கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இனி 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதியோர் உதவித் தொகை 1,200ல் இருந்து 2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் தொகை 1,500ல் இருந்து 2,500 ரூபாயாகும் உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள்
வேளாண்துறையின் கீழ் இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. மிக முக்கியமாக மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரணத் தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொழில்துறையினருக்கான அறிவிப்புகள்
தொழில் வளர்ச்சியை பெருக்கும் விதமாக 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்கா தொடங்கப்படும். இதன் மூலம் புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதுமட்டுமின்றி, 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவனிக்க...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ள முதலமைச்சர், அரசு அமைப்புகளில் ஏற்படும் ஒன்றரை லட்சம் காலி பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதோடு, அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் WIFI வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்
தமிழ்நாட்டின் அனைத்து பகுதி வளர்ச்சியையும் உறுதி செய்யும் விதமாக திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகே நவீன உலகத் தர வசதிகளுடன் புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் 10 ஆயிரம் கோடி செலவில் சீரமைக்கப்படுவதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், மகளிர்களுக்காக...
மருத்துவத்துறையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு தொகை 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும் என்றும், கடலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் வாங்கும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்க, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் திருநர்- திருநங்கையருக்கு விருது வழங்கப்படும் என்றும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது.

5000 கோவில்களுக்கு குடமுழுக்கு
மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல் அறிக்கையில் அழுத்தமாக கூறியிருக்கும் முதலமைச்சர், சென்னையில் செம்மொழி மாநாடும், மொழிப் போராட்ட வரலாற்றை அறியும் வகையில் பொள்ளாச்சியில் காட்சிக் கூட்டமும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு மதச்சார்பற்ற கட்சி என்பதை நிருபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 5000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved