Also Watch
Read this
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், த.வெ.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் எங்கு போட்டியிடுவார்? என்ற சஸ்பென்ஸுக்கு ஒரு வழியாக விடை கிடைத்த நிலையில், 234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார் யார்? என தனித்தனியாக பெயரை சொல்லி அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.

தேர்தல் களத்தில் தவெக, விஜய்
புதிதாக தேர்தலை சந்திக்கும் த.வெ.க. உடன் யாரும் கூட்டணி அமைக்காத நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் என அறிவித்த விஜய், வேட்பாளர்களை தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்து அதிரடி காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்ததாக கூறிய விஜய், த.வெ.க.வுக்கு மக்கள் ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கையெடுத்து கேட்டுக் கொண்டார்.

2 தொகுதிகளில் விஜய் போட்டி
பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் ஜோசப் விஜய் ஆகிய தாம் போட்டியிடுவதாக அறிவித்த விஜய், அடுத்ததாக தியாகராய நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் களம் இறங்குவார் என அறிவித்தார். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் ஈ.சி.ஆர். சரவணனும், ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சனும், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகனும், தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ரமணன் ஆகியோர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் தாமு என்பவரும், திருவிக நகர் தொகுதியில் பல்லவியும் களமிறங்கும் நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ்ஜும் களமிறங்குகிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் நிர்மல்குமாரும், குமாரபாளையம் தொகுதியில் விஜயலட்சுமியும், திட்டக்குடியில் ராஜசேகரும், சைதாப்பேட்டையில் அருள் பிரகாசமும், வால்பாறை ஸ்ரீதரனும், லால்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனும், திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர் மகனுக்கு வாய்ப்பு
ஆயிரம் விளக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து த.வெ.க.வில் ஐக்கியமான ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுவார் என அறிவித்த விஜய், கும்மிடிப்பூண்டி தொகுதியில் விஜயகுமாரும், பொன்னேரி தொகுதியில் ரவியும், திருத்தணி தொகுதியில் வழக்கறிஞர் சத்யகுமார் ஆகியோரும் போட்டியிடுவார்கள் என அறிவித்தார். மதுரவாயல் தொகுதியில் ரோகிணி தியேட்டர் உரிமையாளரும், பாஜக நிர்வாகியான வினோஜ் பி செல்வத்தின் சகோதரருமான ரேவந்த் சரண் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதியில் சினோரா அசோக்கும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து த.வெ.க.வில் இணைந்த டி.செல்வமும் போட்டியிடுவார்கள் என்ற விஜய், விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் நீண்ட கால தனி உதவியாளரும், ஓட்டுநருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கும் வாய்ப்பு அளித்து, நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.

விஐபி வேட்பாளர்கள்
ராணிப்பேட்டையில் தாஹீராவும், வாணியம்பாடியில் சையத் புர்ஹாதீன், ஆம்பூர் தொகுதியில் இம்தியாஸும், பொன்முடியின் மகன் களமிறங்கும் திருக்கோவிலூர் தொகுதியில் பரணி பாலாஜியும், சங்கராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியான ஜெகதீசனும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் த.வெ.க. சார்பில் அருண்குமார் என்பவரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதாக சொல்லப்படும் கோவை வடக்கு தொகுதியில் சம்பத்குமாரும், முன்னாள் அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் சதீஷ் ராஜூவும், செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் செந்தில்குமாரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு எதிராக...
கிணத்துக்கடவு தொகுதியில் விக்னேஷும், கரூர் தொகுதியில், கரூர் துயர சம்பவத்தில் சிறைக்கு சென்ற மதியழகனும் போட்டியிடும் நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் த.வெ.க.வின் இளம் பேச்சாளரான ரமேஷ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதியில் ராமமூர்த்தியும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதியில் திமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு வந்த நவல் பட்டு விஜி என்பவரும், அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதியில் ரேவதியும், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் விஜய் என்பவரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களத்தில் தவெக வேட்பாளர்கள்
டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க. சார்பில் ராஜராஜனும், திருவாரூரில் வீரமணி என்பவரும், தஞ்சாவூர் தொகுதியில் சரவணனும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் முருகேசனும், பட்டுக்கோட்டையில் மதன் என்பவரும், அமைச்சர் ரகுபதியின் திருமயம் தொகுதியில் சிந்தாமணியும், அறந்தாங்கி தொகுதியில் பர்வேஸும், காரைக்குடி தொகுதியில் சீமானை எதிர்த்து பிரபுவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பனின் திருப்பத்தூர் தொகுதியில் ஸ்ரீனிவாச சேதுபதி, சிவகங்கை தொகுதியில் குழந்தை ராணி நாச்சியாரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை வடக்கு தொகுதியில் விஜய் அன்பன் கல்லாணையும், அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் கார்த்திகேயனும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்தி தொகுதியில் முஸ்தபாவும், மதுரை மேற்கு தொகுதியில் தங்கபாண்டியும் போட்டியிடுவார்கள் என விஜய் அறிவித்தார்.

விஜய் நண்பருக்கு வாய்ப்பு
ஆர்.பி.உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் சதீஷ்குமாரும், ஆண்டிப்பட்டி தொகுதியில் லெப்ட் பாண்டியும், ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் த.வெ.க. சார்பில் பிரகாஷும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போட்டியிடும் அருப்புக்கோட்டை தொகுதியில் கார்த்திக் குமாரும், தங்கம் தென்னரசு போட்டியிடும் திருச்சுழியில் சமயனும், ராமநாதபுரம் தொகுதியில் சாகுல் ஹமீதும், ராஜகண்ணப்பனின் முதுகுளத்தூர் தொகுதியில் மலர்விழி ஜெயபாலனும் போட்டியிடுவார்கள் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் போட்டியிடுவார் என விஜய் அறிவித்தார்.

அஜிதா ஆக்னல் போட்டியில்லை
தூத்துக்குடி தொகுதியில் சீட்டு கேட்டு அஜிதா ஆக்னல் காய் நகர்த்தியதோடு, விஜய்யின் காரையெல்லாம் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் விபின் சக்கரவர்த்தியும், நெல்லையில் ஆர்.எஸ்.முருகனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு
திமுகவில் இருந்த ஆர்.எஸ்.முருகன், விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலில் பங்கேற்ற நிலையிலும் சீட்டு வழங்கப்படாததால் த.வெ.க.வில் இணைந்து சீட்டு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிமுக நிர்வாகி ரெட்டியார்பட்டி நாராயணன், அக்கட்சியில் இருந்து த.வெ.க.வில் இணைந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இருந்து விலகிய திருப்பதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், அவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. தூசி மோகன் போட்டி
சபாநாயகர் அப்பாவு போட்டியிடும் ராதாபுரம் தொகுதியில் சதீஷ் கிறிஸ்டோபரும், அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை தொகுதியில் அருள் ஆறுமுகமும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பிய மேல்மா சிப்காட்டுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் அருள் ஆறுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எ.வ.வேலு தூண்டுதலின் பேரில் தான் குண்டாஸ் வழக்கு போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எ.வ.வேலுவுக்கு எதிராக அருள் ஆறுமுகத்தை இறக்கியிருக்கிறார் விஜய். மேலும், செய்யாறு தொகுதியில் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் வெளியேறிய முன்னாள் எம்.எல்.ஏ. தூசி மோகன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனியே புகைப்படம்
செஞ்சி தொகுதியில் சந்திரசேகரன், மயிலம் தொகுதியில் விஜய் நிரஞ்சன், சேலம் தெற்கு தொகுதியில் தமிழன் பார்த்திபனும், ராசிபுரம் தனி தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தனபால், ஈரோடு கிழக்கில் பாலாஜி என மொத்தமாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு, வேட்பாளர்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாக விரும்பியபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.

அதிகளவில் சிறுபான்மையினர்
மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19 பேருக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர் மன்றத்தில் இருந்து விஜய்யுடன் பயணித்து கட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆன சுமார் 100 பேருக்கு எம்.எல்.ஏ. சீட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெண் வேட்பாளர்கள் 23 பேர் த.வெ.க. சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், தனித் தொகுதிகளில் வேட்பாளர்களில் அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாவட்ட செயலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், த.வெ.க.வின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்களில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் 11 பேரும், இஸ்லாமிய வேட்பாளர்கள் 11 பேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரும், திமுகவில் 4 இஸ்லாமிய வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி சார்பில் 8 வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில், மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் இஸ்லாமிய வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் தான் களமிறக்கியிருக்கிறது என்பதும் கவனிக்க வைத்துள்ளது.

எதிர்காலத்தை தீர்மானிக்கும்
அந்தந்த தொகுதிக்கு ஓரளவுக்கு பரீட்சயமான நபர்களையே வேட்பாளர்களாக தேர்வு செய்திருக்கிறார் விஜய். ஆனால், குறிப்பிட்ட சில வேட்பாளர்களை தாண்டி, பெரும்பாலானவர்கள் களத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் அளவுக்கு பலம் வாய்ந்தவர்களா? என்பதும் சந்தேகம் தான். விஜய் என்ற முகத்தை வைத்து வேட்பாளர்களுக்கு விழப் போகும் வாக்குகள் தான் த.வெ.க.வின் அடுத்தக்கட்ட அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved