Also Watch
Read this
By: Web Team

தெற்கு ரயில்வேயின் அலுவலக பணிகளில், இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
அலுவலகப் பணிகளில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.
கடித பரிமாற்றங்களில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து, இந்தி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு, ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன் முடிவு உள்ளிட்ட வார்த்தைகள் இந்தி மொழியில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம்
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சிறு, சிறு குறிப்புகள் கூட இந்தி மொழியில் குறிப்பிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை உள்ளடங்கிய தெற்கு ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வேயின் கீழ், சுமார் ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் இந்தி மொழி பேசும் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. பயணிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள ரயில்வே ஊழியர்கள், உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, டிக்கெட் முன்பதிவு மையங்களில், சிலர் இந்தி மொழியில் மட்டுமே பேசுவதால், தமிழக பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். சில இடங்களில், மொழி புரியாமல் வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved