Also Watch
Read this
குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று செப்டம்பர் 28ஆம் தேதி, முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் தொடக்க விழாவில், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
பாலின வேறுபாடின்றி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்படுகிறது. பிரசவம் முடிந்து தாய் வீடு திரும்பும்போதே குழந்தைகளுக்கான தங்க மோதிரம் நேரடியாக வழங்கப்படும். ஒவ்வொரு மோதிரமும் தனித்துவமான வரிசை எண், கள்ளத்தனமாக திறக்க முடியாத பாதுகாப்பான பேக்கேஜிங் வசதியுடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீவிர சோதனை
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் வருவதை முன்னிட்டு நுழைவு வாயிலில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை தீவிர பரிசோதனை செய்த பின்னரே மருத்துவமனைக்குள் போலீசார் அனுமதித்தனர்.

'தாய் மாமனே வருக'
மதுரையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதற்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் விரகனூரில் 'தாய் மாமனே வருக, வருக' என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி பொதுமக்கள் காத்திருந்தனர்.

அன்புடன் வரவேற்கிறேன்
மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறுகையில், ’தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்கவும், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைத் துவக்கி வைக்கவும், மதுரைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved