Also Watch
Read this

சீன தலைநகர் பீஜிங்கில் அரங்கேறிய இரட்டை சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. இரட்டை சகோதரிகளான Jin Yanshu மற்றும் Jin Yanai ஆகியோரது பரத நாட்டிய அரங்கேற்றத்தில், இந்திய தூதர் விக்ரம் துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டினர்.

சீனாவில் பரதநாட்டிய ஆர்வம்
சீன இளைஞர்கள் மத்தியில் பரதநாட்டியத்தின் முத்திரை, இசை, தாளங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்திய கலாச்சாரத்தை ஆழமாக புரிந்துகொள்ள இந்த கலை வடிவம் ஒரு சிறந்த உறவுப் பாலமாகத் திகழ்கிறது.

பரதநாட்டிய அரங்கேற்றம்
சீனாவில், இரட்டையர்களான ஜின் யான்ஷு, ஜின் யானாய் என்ற 16 வயதுடைய சகோதரிகள், தங்களது பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினர். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய பாரம்பரிய கலை எவ்வாறு எல்லைகளைக் கடந்து, மக்களை இணைக்கிறது, என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது.

தீவிர பயிற்சியில் 12 ஆண்டுகள்
இந்த இரட்டையர், தங்களது 4 வயதில் இருந்தே பரதநாட்டியத்தை முறைப்படி கற்க தொடங்கினர். பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சனின் மாணவியான ஜின் ஷான்ஷான் என்ற சீன குருவிடம் தான், இந்த இரட்டையர் கடந்த 12 ஆண்டுகளாக பரத நாட்டியம் கற்றுத் தேர்ந்தனர்.

இந்த அரங்கேற்ற விழாவிற்கு சீனாவிற்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, அவரது மனைவி சங்கீதா துரைசாமி தலைமை தாங்கினர். ‘இரண்டு இளம் சீன நடனக் கலைஞர்கள் முழு அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்துடன் இந்திய பாரம்பரிய நடனத்தைக் கற்றுக்கொண்டு மேடையில் அரங்கேற்றியது உண்மையிலேயே பாராட்டத்தக்கது,’ என்று தூதர் விக்ரம் துரைசாமி புகழாரம் சூட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved