Also Watch
Read this
By: Admin News Tamil

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் 3வது படம் ‘பாக்கெட் நாவல்’.

தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசை
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசை இந்த படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தற்போது படத்தின் இசைப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிரவ் ஷா படத்தின் மிகப்பெரிய பலம்
‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் திரைப்படம், வதந்தி சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ஒளிப்பதிவில், இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Nirav Shah இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் இந்த படத்திலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது எடிட்டிங், படத்தின் கதை சொல்லல் வேகத்துக்கும் தாக்கத்துக்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

‘பாக்கெட் நாவல்’ வித்தியாசமான கதை சொல்லல்
தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘பாக்கெட் நாவல்’ வித்தியாசமான கதை சொல்லல், வலுவான நடிகர்களின் பங்களிப்பு மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தனித்துவமான திரைப்படமாக உருவாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜாவின் சினிமா உலகில், இந்த படம் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved