Also Watch
Read this
கர்நாடகா மாநிலம், குடகு அருகே முகாமில் யானைகள் குளிப்பதை ரசித்துக் கொண்டிருந்த போது, விபரீதம் நிகழ்ந்து உள்ளது. இரு யானைகள் திடீரென சண்டையிட்ட போது, இடையில் சிக்கிக் கொண்ட சென்னைப் பெண் உயிரிழந்தார்.

யானைகள் முகாம்
கர்நாடக மாநிலம், குடகு துபாரே யானைகள் முகாம் The Dubare Elephant Camp அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இரு யானைகளுக்குள் திடீரென ஏற்பட்ட சண்டையில் சிக்கி, சென்னையை சேர்ந்த ஜிம்னு என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

பல்லாவரத்தை சேர்ந்தவர்
சென்னை, பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஜிம்னு. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா சென்றார். இவர்கள், துபாரே யானைகள் முகாமுக்கும் சென்றனர். அப்போது, அங்குள்ள வளர்ப்பு யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன. பாகன்கள் உதவியுடன் யானைகள் குளிக்க வைக்கப்பட்டன.

யானைகளுக்குள் சண்டை
அப்போது, சுற்றுலா பயணிகள் பலரும் யானைகளை குளிப்பாட்டும் காட்சியை ஆற்றங்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஜிம்னுவும் கணவர் மற்றும் குழந்தையுடன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது 'கஞ்சன்' மற்றும் 'மார்த்தாண்டா' என்ற இரண்டு யானைகளுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்டது.

யானைகளுக்கு இடையில்...
யானைப் பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றும், 'கஞ்சன்' என்ற யானை 'மார்த்தாண்டா' மீது பாய்ந்து தாக்கியது. இதில், தடுமாறி 'மார்த்தாண்டா' கீழே விழுந்தபோது, அருகில் நின்ற ஜிம்னு யானையின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு யானைகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதியதில் அதற்கு இடையே சிக்கி ஜிம்னு பரிதாபமாக உயிரிழந்தார்.

வனத்துறை அமைச்சர் உத்தரவு
அவரது கணவர் கைக்குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடியது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்தது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயணிகளுக்கு அறிவுறுத்தல்
பழக்கப்பட்ட யானைகள் கூட எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளக்கூடும் என்பதால், யானைகளின் தும்பிக்கையை தொடுதல், அருகில் நின்று போட்டோ எடுப்பது, யானைகளை குளிப்பாட்ட அனுமதிப்பது, வாழைப்பழம், வெல்லம் போன்ற உணவுகளை வழங்குவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved