Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் வரும் தாம்பரம் மாநகராட்சியில், 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டெண்டர்களில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், தவெக அரசின் முதல் டெண்டர் முறைகேடு இதுதான் என்று கூறி, அறப்போர் இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

முறைகேடு அல்ல, பகல் கொள்ளை...
டெண்டர் கோரப்பட்டு, அது யாருக்கு போகப்போகிறது என்ற சஸ்பென்ஸ் உடைவதற்கு முன்பாகவே, தாம்பரம் மாநகராட்சியில் 45.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை முடித்து, திறப்பு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இது வெறும் முறைகேடு இல்லை, பகல் கொள்ளை என ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கம் புகார்
தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளை மொத்தமாக தூக்கி குப்பையில் வீசிவிட்டு, தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுச்சதி செய்து, அண்டர் டேபிள் டீலிங் மூலம் பணிகளை முடித்துவிட்டு, அதற்கு பிறகு கண் துடைப்புக்காக போலி டெண்டர்களை இணையதளத்தில் பதிவேற்றியிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது.

டெண்டர் திறப்பதற்கு முன்னரே...
அசோகத் தூண் அமைத்து அழகுபடுத்தும் இந்த வேலைக்கு tntenders.gov.in தளத்தில் டெண்டர் வெளியானதே ஆகஸ்ட் 6ல் தான். அந்த டெண்டர் பிரிக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ தேதி ஆகஸ்ட் 24. ஆனால், டெண்டர் நோட்டீஸ் வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29ஆம் தேதியே வேலை முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. அமைச்சர் சரத்குமார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவிலும் பதிவேற்றி தம்பட்டம் அடித்து கொண்டதாக அறப்போர் இயக்கம் பகிரங்கமாக சாடியுள்ளது.

அப்பட்டமான சான்று...
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைக்கும் பணிக்கும் இதே பாணி தான். ஆகஸ்ட் 6ல் தான் டெண்டர் ஆன்லைனுக்கு வருகிறது. ஆகஸ்ட் 24ல் தான் கவர் பிரிக்கப்பட வேண்டும். ஆனால், டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஆகஸ்ட் 10 அன்றே சிலை திறந்து வைக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் போட்ட சட்டவிரோத கூட்டணியின் அப்பட்டமான சான்று என்கிறது அறப்போர்.

565 டெண்டர்களில்...
கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில், 309 டெண்டர்கள் இதே போல திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கின்றன. ஒரே ஒரு டெண்டர் மட்டும்தான் இறுதி புள்ளியை அடைந்திருக்கிறதாம். இந்த மெகா பித்தலாட்டத்தை கையில் எடுத்திருக்கும் அறப்போர் இயக்கம், அதிரடி கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறது.

மாநகராட்சி ஆணையர் மாற்றம்
சட்ட விதியை மீறி, போலி டெண்டர் நாடகத்தை அரங்கேற்றிய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஆணையர் உட்பட அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாக குரல் கொடுத்துள்ளது.

முறைகேட்டுக்கு துணைபோன ஒப்பந்ததாரர்களை பிளாக்லிஸ்ட் செய்து, தமிழக அரசின் எந்தவொரு டெண்டரிலும் பங்கேற்க முடியாதவாறு தடை விதிக்க வேண்டும் என்றும் கொந்தளித்துள்ளது. இதினிடையே தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

உரிய நடவடிக்கை
இதனிடையே இந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் செயல்முறை குறைபாடு காரணமாக தாம்பரம் மாநகராட்சி மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், நகராட்சி நிர்வாக இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், விசாரணைக்கு பின் உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved