Also Watch
Read this
By: Web Team
தமிழக வெற்றிக் கழகத்தினரும் தானும் சமூக நல்லிணக்கத்தை நூறு சதவீதம் பாதுகாப்போம் என்று, தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உறுதியளித்த விஜய், பைபிளில் உள்ள ஒரு கதையை மேற்கோள் காட்டி மேலோட்டமாக அரசியல் பேசி முடித்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பை கொண்டாடும், கிறிஸ்துமஸ் பெருவிழாவை அரசியல் கட்சிகள் கொண்டாடி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும் கட்சித் தலைவர் விஜய் தலைமையில், மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கு மட்டுமான நிகழ்ச்சியாக இல்லாமல், அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி, கிறிஸ்தவ பாதிரியார்களுடன், ஆற்காடு நவாப் முகமது அலி, பிரம்மகுமாரி அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரும் மேடையை அலங்கரித்தனர். அவர்கள் அனைவருக்கும் விஜய், பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி மரியாதை செய்தார்.
நிகழ்ச்சி அரங்கினுள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்குகளை விஜய், ஆன் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அடுத்ததாக இசைக்குழுவினர் அரங்கேற்றம் செய்த கிறிஸ்துமஸ் பாடலும் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் பாடலும் கேட்போர் அனைவரையும் மனமுருக வைத்தது.
தொடர்ந்து, இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் போன்ற ஒரு அமைப்பை தவெகவை சேர்ந்த நிர்வாகி மரிய வில்சன் விஜய்க்கு நினைவு பரிசாக வழங்கினார். மேடையில் வீற்றிருந்த அத்துணை தலைவர்களும் அடுத்தடுத்து உரை நிகழ்த்தினர்.
பலத்த கரகோஷத்துக்கு மத்தியில், உரையாற்ற வந்த விஜய், நம்பிக்கை குறித்து பைபிளில் உள்ள ஜோசப்பின் கதையை குறிப்பிட்டு பேசினார்.
தானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம் என உறுதியளித்த அவர், கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும் எனக் கூறி, தனது உரையை சுருக்கமாக நிறைவு செய்தார்.
சிறப்பு விருந்தினர்களே கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடம் வரை உரையாற்றிய நிலையில், 5 நிமிடம் மட்டுமே விஜய் பேசியது அரங்கத்தில் இருந்தவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சிக்கு நடுவே மேடையேறிய கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்கள், நடனம் ஆடி விஜய்க்கு வாழ்த்துக்களை கூறினர். அடுத்ததாக சுட்டீஸ் அனைவரும் விஜய்க்கு ரோஜா மலரை அளித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தனக்கு பூ கொடுத்த குழந்தைகளில் சுட்டியாக இருந்த ஒரு பெண் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்ட விஜய், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.
சுட்டீஸ் கொடுத்த கண்ணாடி ஒன்றினை அணிந்தபடியே, கேக்கை வெட்டி சிறாருக்கு ஊட்டி விஜய் மகிழ்ச்சியுற்றார். குழந்தைகளும் விஜய்க்கு கேக்கை ஊட்டி உற்சாகமடைந்தனர்.
இறுதியாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நிறைவுபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved