Also Watch
Read this
2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மூன்றாம் இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் பிளே ஆஃப் சுற்றில், இவ்விரு அணிகளிடமும் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. இந்த போட்டி எப்படி இருக்கும்? யாருக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம்?

மூன்றாம் இடம் யாருக்கு?
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிகளில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ் அணியும், அர்ஜெண்டினாவிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியும், மூன்றாமிடத்துக்காக பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. மூன்றாமிடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் பிளே ஆஃப் சுற்று வரும் 19ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மியாமி கார்டனில் நடைபெறவிருக்கிறது.

பிரான்ஸ் vs இங்கிலாந்து
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சமபலம் வாய்ந்தவை. பிரான்ஸின் வேகமும், திறமையான தாக்குதலும் எதிரணி வீரர்களை கலங்கடிக்கக் கூடியது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அதன் நாக்-அவுட் அனுபவம் மற்றும் மிட்ஃபீல்ட் ஆழம் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அணியில் கிலியன் எம்பாப்பே தனது அசாத்திய வேகத்தால் எதிரணிகளை மிரட்டி வருகிறார். எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பேலேயின் மின்னல் வேக நகர்வு, எதிரணியின் டிஃபென்ஸை திணறடிக்க கூடியது. தொடர்ச்சியாக பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம், நாக்-அவுட் கட்டங்களில் அழுத்தத்தை எளிதாகக் கையாள உதவுகிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் வலுவான கோல் வித்தியாசத்தில் எதிரணிகளை பந்தாடிய அனுபவமும் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது.

பிரான்ஸ் அணியின் தடுமாற்றம்
டிஃபென்ஸ் குறைபாடுகள் தான் பிரான்ஸ் அணியின் பிரதான பலவீனம். முக்கிய டிஃபென்டரான William Saliba காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வில்லியம் சலிபாவுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எதிரணியின் செட்-பீஸ் வாய்ப்புகளைத் தடுப்பதில் சில நேரங்களில் பிரான்ஸ் அணி தடுமாறி வருகிறது.

ஆபத்தான இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களான ஹாரி கேன், ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் பில் ஃபோடன் ஆகிய மூவரும் களத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். முந்தைய தலைமுறையை விட தற்போது ஒவ்வொரு பொசிஷனிலும் மாற்று வீரர்கள் இருப்பதால் அணியின் பலம் குறைய வாய்ப்பில்லை.

தாமஸ் துச்சலின் பயிற்சியின் கீழ் செட்-பீஸ்களில் இங்கிலாந்து அணி மிகவும் ஆபத்தானது. சென்டர்-பேக் காம்பினேஷன்களில் தொடர்ந்து தடுமாறி வருவது இங்கிலாந்து அணியின் முக்கிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. பெரிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கடைசி நிமிட அழுத்தத்தால், நாக்-அவுட் சுற்றின் இறுதிக் கட்டங்களில் சில தவறுகளைச் செய்வதும் பலவீனமாக அமைந்துள்ளது.

இதுவரை மோதிய போட்டிகளில்...
பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து 17 போட்டிகளிலும், பிரான்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. உலகக் கோப்பை அரங்கில் இரு அணிகளும் தலா 3 டிரா மற்றும் 3 வெற்றிகளுடன் சம பலத்துடன் உள்ளன. கடைசியாக 2022 உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது...
உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஒரு அடியில் தவறவிட்டுள்ள இரு அணிகளும் மூன்றாவது இடத்தையாவது கைப்பற்றி ஆக வேண்டும் என எண்ணத்தில் கடுமையாக போராடும் என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமிருக்காது.