Also Watch
Read this

80களின் ரெட்டோ ஏஐ டிரெண்டிங்கில் பக்கத்துவீட்டு நபர் முதல் பிரபலங்கள் வரை இணைந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் போட்டாக்களும் உலா வருகிறது. நினைத்தாலும் 80களுக்கு செல்ல முடியாது என்பதால் அந்த காலத்து ஹீரோ மற்றும் ஹீரோயின் லுக்கில் தங்கள் போட்டோக்களை மாற்றி பலரும் சிலாகித்து வருகின்றனர்.

சாப்பாடு போலத்தான்...
ஒரு மனிதனுக்கு சாப்பாடு எப்படி முக்கியமோ? அது போன்று தான் இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதள டிரெண்டிங்கும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் மனிதர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது. அந்தவகையில், தற்போது இன்ஸ்டாவை திறந்தால் போதும், இதோ 80களில் இப்படிதான் இருந்திருப்போம் என பார்த்து மகிழும் போஸ்ட் தான் வந்து கொட்டுகிறது.

தற்போதைய டிரெண்டிங்
சில நாட்களுக்கு முன்பு, சாட்ஜிபிடியால் உருவாக்கப்பட்ட ஜிப்லி அனிமேஷன் மின்னல் வேகத்தில் டிரெண்டானது. தற்போது, 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, பாக்யராஜ், மோகன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் ஸ்ரீதேவி, நதியா, அம்பிகா, ராதா, அமலா, ரேவதி, சுஹாசினி உள்ளிட்ட நடிகைகளும் எப்படி ஆடை, அலங்காரம் செய்தார்களோ, அந்த லுக்கில் இன்றைய தலைமுறையினர் தங்கள் போட்டோக்களை மாற்றி சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆட் யுவர்ஸ் என்ற ஸ்டிக்கர் மூலம் இந்த டிரெண்டிங் போட்டோக்கள் அதிவேகமாக பரவி வருகிறது.

80களின் ஆடைகள்
கூர்மையான வடிவில் உள்ள சட்டை காலர், ஹேர் ஸ்டைல், மீசை, பெல்ஸ் பேண்ட், பெல்ட் என ஆண்கள் தங்கள் போட்டோக்களை அந்த காலத்து ஹீரோக்கள் போன்று மாற்றி பதிவிட்டு வரும் நிலையில் பெண்களும் அந்த காலத்து ஹீரோயின்கள் போன்று ஹேர் ஸ்டைல், நெற்றிப்பொட்டு, கண் மை, புடவை, மாடர்ன் உடை, உதட்டுச்சாயம், கேமரா எஃபெக்ட் என தங்கள் லுக்கை மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இந்த டிரெண்டிங்கில் சாதாரண மக்கள் மட்டும் இணையவில்லை. நடிகைகள் சமந்தா, தமன்னா, ஹன்சிகா, அனுபமா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரீத்தி முகுந்தன், அசோக் செல்வன்,

மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டின், ரம்யா பாண்டியன், ராய் லட்சுமி, நந்திதா ஸ்வேதா, ரேஷ்மா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் தத்ரூபமாக வின்டேஜ் புகைப்படமாக மாற்றி பதிவிட்டு சமூகவலைதள டிரெண்டிங்கிற்கு கூடுதல் பூஸ்ட் கொடுத்துள்ளனர்.

குவியும் லைக்ஸ்
அதேபோல், நடிகர்கள் அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் 80ஸ் லுக்கில் எப்படி இருப்பார்கள் என்ற போட்டோக்களும் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

நகைச்சுவை நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பதுபோன்ற 80ஸ் லுக் போட்டோ படுவேகமாக பரவி வருகிறது.

அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் ஃபேன் பேஜில் வலம் வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயல் என்ஃபீல்ட் பைக்கில் கெத்தாக அமர்ந்திருப்பது போன்ற இளம்வயது புகைப்படமும் அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப சமூகவலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் டிரெண்டிங் புகைப்படமும் ஃபேஸ்புக்கில் உலாவர, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் தனது ரெட்ரோ லுக் போட்டோவை பதிவிட்டு டிரெண்டிங்கில் தானும் இருப்பதாக பிரசண்ட் ஆகி உள்ளார்.

பிரபலம் முதல் சாமானியர் வரை
இதற்கு மத்தியில், TVK 2026 என்ற பைக் எண்ணுடன் ரெட்ரோ லுக்கில் உள்ள நடிகர் சிபி சத்யராஜின் புகைப்படமும் இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படி பாலிவுட், ஹாலிவுட், மல்லுவுட், டோலுவுட் என பெரும் நடிகர், நடிகை பட்டாளமே இந்த டிரெண்டிங் போட்டோக்களில் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களும் அந்த காலத்து தோற்றத்தில் இணைந்துள்ளனர். நாம் வேண்டி விருப்பப்பட்டாலும் 80 கால கட்டங்களுக்கு சென்று வாழ்வது என்பது நடக்காத காரியம்.

அதனால், இதுபோன்ற போட்டோக்களை மாற்றி ஜென்ஸி கிட்ஸ்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் மகிழ்ச்சியடைவதோடு தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த 80ஸ் போட்டோ காய்ச்சல் தீர எப்படியும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை இன்ஸ்டாவில் தான் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் நாமும் அதனை பார்த்து ரசிப்போம். லைக்குகளை கொடுத்து மற்றவர்களையும் மகிழ்ச்சியடைய வைப்போம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved