Also Watch
Read this
இபிஎஸ் கொடுத்துள்ள வெறும் அலங்கார பதவிகள் தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பறிக்கப்பட்ட பழைய பதவிகளை கொடுத்து கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேலுமணி தரப்பினர் மீண்டும் போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் கட்சியை தேய்த்தது மட்டுமில்லாமல், தொடர் தோல்விக்கான காரணம் குறித்தும் ஆராயமாட்டோம் என இபிஎஸ் அடம்பிடித்தால் தலைமைக்கு எதிராக தக்க முடிவு எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு...
என்ன தான் அதிமுகவில் சலசலப்பு அடங்கி சில நாட்கள் அமைதி திரும்பி இருந்தாலும், பதவி விவகாரத்தில் இபிஎஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை என்ற வருத்தம் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இன்னும் இருக்கவே செய்கிறது. அதனால், தலைமைக்கு எதிரான அவர்களின் கோபசூடும் ஆறவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப்பிறகு இரு அணியாக பிரிந்த அதிமுகவினர், அதன்பிறகு பேச்சுவார்த்தை, மன்னிப்பு கடிதம் என பல நிபந்தனை படிகளை கடந்து ஒருவழியாக ஓரணியாக இணைந்தனர். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த வேலுமணி தரப்பினரின் கட்சிப்பதவிகளை பறித்த இபிஎஸ் அதன்பிறகு அவர்களுக்கு பெயரளவில் உள்ள அலங்கார பதவிகளை கொடுத்து வாயை அடைத்தார். அந்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்கியது. ஆனால், அந்த கொடிக்கெல்லாம் இபிஎஸ் அசைந்து கொடுக்கவில்லை.

கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை
இந்த விவகாரம், உள்ளுக்குள் உரசலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எம்.எல்.ஏ. அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இபிஎஸ் தங்களுக்கு வழங்கி உள்ள புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனக்கூறிய எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்காகவும், அதிமுக ஆட்சி அமைவதற்காகவும் உழைத்தவர்களை மீண்டும் இரட்டை இலையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம், அதோடு இபிஎஸ் முதலமைச்சர் ஆவதற்காகவும், அவர் பொதுச்செயலாளர் ஆவதற்காகவும் உழைத்தவர்களையும் இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம், அந்த கோரிக்கைகள் எல்லாம் தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.

கட்சி எப்படி வளரும்?
குறிப்பாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறிய எஸ்.பி.வேலுமணி, தொடர் தோல்விக்கான காரணம் குறித்து உரிய ஆய்வு நடத்த வலியுறுத்தினோம், அதிலும் இபிஎஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாறாக 200க்கும் மேற்பட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். கட்சியை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நீக்குவதில் கவனம் செலுத்தினால் கட்சி எப்படி வளரும்? என கேள்வி எழுப்பிய வேலுமணி, அனைவரையும் அனுசரித்து உடன் வைத்துக் கொள்வதே நல்லதொரு பொதுச்செயலாளருக்கு அழகு எனவும் கூறினார்.

தலைமைக்கு எதிராக...
இதனை தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 134 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த அதிமுக, தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் படிப்படியாகத் தேய்ந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக கவலையடைந்தார். நாளுக்கு நாள் கட்சி வளர்ச்சியடைந்துள்ளதா அல்லது தளர்ச்சியடைந்துள்ளதா என்பதை தலைமைதான் மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் அனைவரின் ஆலோசனைகளை கேட்காதபட்சத்தில் தலைமைக்கு எதிராக கூடியவிரைவில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

எப்படி சமாளிக்கப் போகிறார்?
ஆக மொத்தத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என்பதில் விடாப்பிடியாய் இருக்கும் வேலுமணி தரப்பை இபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார்? கட்சியை வலுத்தப்படுத்தினால் போதும் என்றெண்ணி பழைய பொறுப்புகளை வேலுமணி தரப்புக்கு வழங்குவாரா? அல்லது பதவியை பறித்தது பறித்தது தான், தான் எடுத்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved