Also Watch
Read this
By: Manigandan Raja

நட்சத்திர வீரர்கள் 2 பேரும் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் :
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். லண்டனில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக்கை எதிர்கொண்ட ஜோகோவிச், முதல் 2 செட்களையும் வென்றார்.
3-வது செட்டை ஆர்தர் கைப்பற்றி அதிரடி காட்டினார். எனினும், 4-வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார். மற்றொரு போட்டியில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-க்கு 4, 6-க்கு 3, 6-க்கு 4 என்கிற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேன்சன் புரூக்ஸ்பியை வீழ்த்தினார்.
செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். கிராண்டஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அவர் இதுவரை 105 வெற்றிகளை பெற்றுள்ளார். இதன் மூலம், விம்பிள்டன் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் பிரான்சின் ஆர்தர் ரின்டர்க்னெச்சை 7-க்கு 5, 6-க்கு 4, 1-க்கு 6, 7-க்கு 6 என்கிற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், ஜோகோவிச் இந்த சாதனையை படைத்தார்.
சுவிட்சர்லாந்து, ஜப்பான், அமெரிக்க வீராங்கனைகள் அபாரம் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பென்சிக் உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். லண்டனில் நடைபெற்ற போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை 6-க்கு 1, 6-க்கு 3 என்கிற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், 6-க்கு 4, 4-க்கு 6, 7-க்கு 6 என்கிற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தினார். அதேபோல, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-க்கு 1, 6-க்கு 3 என்ற நேர்செட் கணக்கில், ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா தோல்வி :
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் வீராங்கனை 7க்கு 6 , 6க்கு 1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.