Also Watch
Read this
By: Manigandan Raja

துபாயில் திருமணம் செய்துகொண்ட "ரோபோ" ஜோடி
துபாயில் ரோபோக்கள் திருமணம் செய்துகொண்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள "பூ சுனைதா" ((Bu Sunaidah)) என்ற மனித ரோபோ ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலம். சாலைகளில் மனிதர்களை போலவே நடப்பது, ஓடுவது, மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்துகொள்வது என இதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பிரபலம்.
இந்த சூழலில், இந்த ஆண் ரோபோ, மோசா என்கிற பெண் ரோபோவை திருமணம் செய்து கொண்டுள்ளது. 2 ரோபோக்களும் திருமண உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்துவிட்டு "ஜென் சி" தலைமுறையினர் ரோபோவுக்கெல்லாம் பெண் கிடைக்கிறது என நொந்தபடி வேடிக்கையாக புலம்புகின்றனர்.
ஈரான் மீதான போரால் நீண்டதூர ஏவுகணைகள் காலி

ஈரான் மீதான தொடர் போரினால் அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகள் இருப்பு பெருமளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், எதிர்கால ராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
இந்த ஏவுகணைகளின் மதிப்பு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பதால், இனி ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த வேண்டுமானால் விமான தாக்குதல்களையே அமெரிக்கா அதிகம் நம்ப வேண்டி இருக்கும் கூறப்படுகிறது.
நடுவழியில் பழுதாகி 15 நாட்களாக நின்ற அகதிகள் படகு

ஸ்பெயின் அருகே அகதிகள் படகு நடுவழியில் பழுதானதில் உணவு மற்றும் குடிநீர் இன்றி 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றபோது நடுவழியில் படகு பழுதானதாகவும், இந்த படகில் 19 பேர் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த படகு நின்றிருந்த நிலையில், ஸ்பெயின் கடற்படையினர் மீட்டனர்.