Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அனுமதி நீட்டிக்கப்படாது :
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் அனுமதி அளித்தது.

அது, கடந்த 11ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவிற்கு அனுமதித்த விலக்கு நீட்டிக்கப்படாது என அமெரிக்க நிதி அமைச்சர் வாஷிங்டனில் தெரிவித்தார். இதனால் இந்தியா உள்ளிட்ட கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் பாதிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் வேகாஸ் நகரில் சினிமா கான் திரைப்பட விழா :

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சினிமா கான்((CinemaCon )) திரைப்பட விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் டாம் குரூஸ், நிகோலஸ் கிட்மேன் மற்றும் டிமோத்தி உள்ளிட்ட பிரபலங்களின் புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய திரைப்பட விழா இன்றுடன் நிறைவடைகிறது.
வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :
அமெரிக்காவில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மிச்சிகன், மில்வாக்கி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தன. மழைநீர் வடிகால்கள் நிரம்பி சாலையில் தண்ணீர் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
3 நாள்கள் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் :

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் மூன்று நாள்கள் பயணமாக இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் அதிபர் லீ ஜே மியுங்கின் இந்திய வருகை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஞாயிறன்று இந்தியாவுக்கு வருகை தரும் அவர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.