Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானை சென்றடைந்த மருத்துவ உதவிப் பொருட்கள் :
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ உதவிப் பொருட்கள் ஈரானை சென்றடைந்தன. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மருத்துவ நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மனிதாபிமான அமைப்புகள் உதவி கரம் நீட்டி உள்ளன.
ஜோர்டான் மற்றும் துருக்கியிலிருந்து 14 லாரிகள் மூலம் 171 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. வான்வெளி மூடப்பட்டதாலும், பாதுகாப்பற்ற கடல் மற்றும் தரைவழிப் பாதைகளாலும் உதவிப் பொருட்கள் விநியோகம் தாமதமான நிலையில் ஒருவழியாக அவை ஈரானை சென்றடைந்தன.
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் ஆஸ்திரேலிய பயணம் :

பிரிட்டன் இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மனைவி மேகனுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹாரி, மெல்போர்ன், கான்பெரா மற்றும் சிட்னியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த தனது ராணுவ பதக்கங்களை அணிந்து வந்த ஹாரி, பழங்குடியினரின் புகை சடங்கிலும் கலந்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து விலகுவதற்கு முன் கடந்த 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது, மேகன் தனது முதல் கர்ப்பத்தை அங்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய நிறுவனர் கிம் இல் சுங்கின் 114ஆவது பிறந்தநாள் :

வட கொரிய நிறுவனரின் பிறந்தநாள் பியாங்யாங்கில் மலரஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்பட்டது. வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 114-வது பிறந்தநாளையொட்டி, அந்நாட்டு மக்கள் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள தங்கள் தலைவர்களின் சிலைகளுக்கு முன்பாக மலரஞ்சலி செலுத்தினர்.
ஹார்முஸ் நீரிணைக்கு வந்த கப்பல் மீண்டும் திரும்பியது :

வளைகுடாவில் இருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பல் அமெரிக்கா விதித்திருந்த தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் மீண்டும் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, உடன்பாட்டை எட்டாத நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் போர் கப்பல்கள் நுழைய முயன்றால் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சி படை எச்சரித்த நிலையில், முற்றுகை அறிவிக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் சீனாவிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் உள்பட 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு வந்து திரும்பியுள்ளன.