Also Watch
Read this
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான செய்திக்கு அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார். பொது மக்களின் கருத்தை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்தார்.

கும்பாபிஷேக விழா...
அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம் பின்புறம் பழமை வாய்ந்த இந்து சமய
அறநிலையத் துறைக்கு உட்பட்ட சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில், குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. ராஜகோபுரத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டபோது, கோயில் வளாகத்தை சுற்றி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா’ என்ற கோஷத்துடன் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோயில்கள் மறு சீரமைப்பு...
இதனை தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் கூறியதாவது;
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள கோயில்களைக் கண்டறிந்து, விழா நடத்துவதற்கான ஆயத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட மற்றும் இடிந்த நிலையில் உள்ள கோயில்களைப் பட்டியலிட்டு, தற்போதைய ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்திற்குள் அவற்றை மறுசீரமைப்பு செய்து மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டண உயர்வு, விளக்கம்
கோயில் நிலங்களை முறைப்படுத்துவது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதால், பணிகளை முழுமையாக முடிக்க சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. அங்கு நிலவி வந்த சில முறைகேடுகளைத் தவிர்க்கவே தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்களிடம் கருத்து கேட்பு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த அரசு எந்தவொரு முடிவையும் எடுக்காது.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.