Also Watch
Read this
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நாடோடிகள் பட நடிகை ஒருவர் மீண்டும் மோசடி புகாரளித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ராஜ்ய சபா எம்.பி.ஆனதும் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாக கூறிவிட்டு, இப்போது கம்பி நீட்டியதோடு குடும்பத்தையே மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்
கன்னித்தீவு நெடுந்தொடரை போல, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் நாடோடி பட நடிகைக்கும் இடையேயான பாலியல் பஞ்சாயத்து மட்டும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து பின்னர் மூன்றே ஆண்டுகளில் நீக்கப்பட்டவர் தான் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். அதிமுகவில் சக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் விளைவாக கட்சியிலிருந்து மணிகண்டன் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில் தான், அமைச்சராக இருந்தபோது, அவருக்கும் நாடோடி பட துணை நடிகை ஒருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தாக தெரிகிறது. இருவருக்குமான நெருக்கம் நாளடைவில் அதிகமாகி கருக்கலைப்பு வரை சென்றதாக சொல்லப்படுகிறது.

உறவில் விரிசல்
இதனிடையே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகாக மணிகண்டனுக்கும் நடிகைக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதோடு, தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக, அந்த நடிகை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர், பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்து இருந்தார். ஏகப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகள், வாய்ஸ் கால் ரெகார்டிங்ஸ், வீடியோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். அதோடு, நடிகையை அடியாட்களை வைத்து அடித்து மிரட்டியது என பல்வேறு ஆதாரங்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.

குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகையின் புகார் மனு மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கையில் விலங்கு மாட்டப்பட்டது. சிறைப் பறவையாய் தவித்து வந்த மணிகண்டன், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி நடிகையின் மலேசியா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு வாபஸ்
இந்நிலையில், இறுதி முயற்சியாக தனது வழக்கறிஞர்களை அனுப்பி மணிகண்டன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதாவது மாநிலங்களவை தேர்தலில் தமக்கு சீட் வழங்கப்பட உள்ளதாகவும், எம்பியான பிறகு உனது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் நடந்து நடந்து ஓய்ந்து போன அந்த நடிகை, முன்னாள் அமைச்சருடன் சமரசத்திற்கு செல்ல முடிவெடுத்து வழக்கை இறுதிகட்டத்தில் இருக்கும் போது வாபஸ் பெற்றார்.

தானே வாதாடிய நடிகை
மணிகண்டனுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த நடிகை, அவரை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் தான், பாதிக்கப்பட்ட நடிகை மீண்டும் மகளிர் ஆணையத்தை நாடி புகார் ஃபலை தூசி தட்டியுள்ளார்.
இதனிடையே நடிகைக்காக வாதாடும் வழக்கறிஞர்களை மணிகண்டன் தரப்பு விலைக்கு வாங்கி வருவதாகவும், 8 வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து விலை போனதால், தாமே நேரில் ஆஜராகி வாதாடியதாக விசாரணைக்கு பின் நடிகை விளக்கமளித்தார்.

நியாயம் வேண்டும்
அதோடு, மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்த அவரது வழக்கறிஞர்கள், இதேபோல் முதல்வருக்கு எதிராக ஒரு பெண் புகார் கூறினால் அவருக்கு சம்மன் அனுப்புவீர்களா? எனக்கேட்டு மகளிர் ஆணைய தலைவி குமாரியை மிரட்டியதாகவும் நடிகை பகீர் கிளப்பினார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் ஒருவரின் மிரட்டல்களாலும் அதிகார ஆணவத்தாலும் பாதிக்கப்பட்ட தமக்கு நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.