Also Watch
Read this
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டில் நிகழ்ந்த மோசமான தீ விபத்துக்களில் ஒன்றான இந்த விபத்தில், இந்தியர்கள் உள்பட 13 பேர் பலியான நிலையில், காயமடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகின் பணக்கார நாடு...
பாரசீக வளைகுடாவை ஒட்டிய அரேபிய தீபகற்பகத்தில் அமைந்துள்ள உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று தான் கத்தார். இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த கத்தாரில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தாரின் புகழ்பெற்ற ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் பர்சான் எரிவாயு உற்பத்தி மையம் உள்ளது. இங்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீண்டும் இயக்க முடிவு
கடந்த 4 மாதமாக நீடித்த ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, எரிவாயு உற்பத்தி ஆலையில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஈரான் - அமெரிக்காவுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனதை அடுத்து, பர்சான் எரிவாயு உற்பத்தி மையத்தை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, எரிவாயு உற்பத்தி மையத்தில் பணிகளை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு, எரிவாயு உற்பத்தி மையம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த வெடிப்பு மத்திய தோஹா முழுவதும் உணரப்பட்ட நிலையில், வீடுகளின் ஜன்னல்களை அதிர வைத்தது.

13 தொழிலாளர்கள் உயிரிழப்பு
இந்த மோசமான தீ விபத்தில், இந்தியாவை சேர்ந்த 12 பேர் உள்பட 13 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தீக்காயம் அடைந்த 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில், 13 பேர் பலியானதை உறுதிப்படுத்திய கத்தார் நாட்டு எரிசக்தி துறை அமைச்சர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் எந்தவித சதி வேலைகளோ, வெளிநபர் தாக்குதலோ கிடையாது எனவும் தெளிவுபடுத்தினார்.

பபித், சஜித்குமார், சுபின் உயிரிழப்பு
கத்தார் எரிவாயு உற்பத்தி மையம் வெடிப்பு விபத்தில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் 26 வயது மகன் பபித், பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்த 25 வயதான சஜித்குமார் மற்றும் அழகிய நம்பியாபுரத்தை சேர்ந்த 24 வயதான சுபின் என்பவரும் மரணம் அடைந்தனர். கத்தாரில் உயிரிழந்த இளைஞர்களின் சொந்த ஊர்களான சிதம்பராபுரம், சிவகாமிபுரத்தில் உள்ள அவர்களின் வீடுகளில் உறவினர்கள் சோகமடைந்த நிலையில், இளைஞர்களின் உடலை விரைந்து கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வர் விஜய் இரங்கல், நிதியுதவி
இதற்கிடையே, கத்தாரில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 3 இளைஞர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமது ஆழ்ந்த இரங்கலையும், வேதனையும் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கத்தாரில் உள்ள இளைஞர்களின் உடலை தமிழகத்திற்கு விரைந்து கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு
இந்த விபத்து தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் 91-1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொள்பவர்கள் 91- 80 6900 9900, +91- 80 6900 9901 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.