Also Watch
Read this
தூத்துக்குடி விமான நிலையம் அருகே பேயாட்டம் ஆடிய சுழற்காற்றால், சாதாரண வீடுகள் தொடங்கி சுங்கச்சாவடி, தீம் பார்க் போன்ற கட்டுமானங்களும் காற்றில் பறந்த நிலையில், ஆச்சர்யம் ஒருபுறம், அதிர்ச்சி மறுபுறம் என அப்பகுதி மக்கள் கதிகலங்கினர். பொதுவாக வெளிநாடுகளை கலங்கடிக்கும் இந்த சுழற்காற்று தமிழ்நாட்டில் ஏற்பட்டது எப்படி? உண்மையிலேயே அது Tornado தானா? அரிதினும் அரிதாக ஏற்பட்ட இந்த வானிலை நிகழ்வு குறித்து என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?

விஸ்வரூபம் எடுத்த சுழல் காற்று
தூத்துக்குடி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயில் சக்கை போடு போட்ட நிலையில், மாலை 4 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து, பரவலாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி விமான நிலையம் அருகிலுள்ள பகுதியில், தரையிலிருந்த புழுதியை கிளப்பியபடி மெல்லிய சுழல் போன்ற காற்று வான் நோக்கி எழுந்தது. பின்னர் மெல்ல மெல்ல வேகம் கூட்டிய சுழற்காற்று, விஸ்வரூபமெடுத்து புழுதியுடன் குப்பை கூளங்கள் முதல் தகரம் போன்ற கனமான பொருட்களையும் வாரி சுருட்டிக் கொண்டு வேகமாக சுழன்றபடி சென்றது.

சின்னாபின்னமான சுங்கச்சாவடி
செல்லும் வழியெங்கும் ருத்ர தாண்டவம் ஆடிய சுழற்காற்று, ஆங்காங்கே மரங்களை பிய்த்தெறிந்ததோடு, வீடுகளின் மேற்கூரைகளை சுக்குநூறாக்கியது. குறிப்பாக வாகைக்குளம் சுங்கச்சாவடி சிதறி சின்னாபின்னமானது. மேற்கூரைகள் காற்றில் பறந்ததோடு, சுங்கச்சாவடி கேபின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில், கண்ணாடி சில்லுகள் குத்தி ஊழியர்கள் மூவர் காயமடைந்தனர். இதனால் சுங்கச்சாவடியின் இயக்கமே முற்றிலும் முடங்கியது.

தீம் பார்க்கில் புகுந்த சுழற்காற்று
சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தீம் பார்க்கிலும் சுழற்காற்று புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. தீம் பார்க்கில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த 4 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
பின்னர், முடிவைத்தானேந்தல் கிராமத்தை நோக்கி நகர்ந்து சென்ற சுழற்காற்று, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பல வீடுகளின் மேற்கூரையில் இருந்த ஓடுகள், ஆஸ்பெட்டாஸ் கூரைகள் தூக்கி வீசப்பட்டதால், வீட்டிற்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. சில இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்தன. இந்த கிராமத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், அருகில் உள்ள நடுகூட்டுடன்காடு கிராமத்தில் 5 வீடுகள் சேதமடைந்தன.

சென்னை வானிலை மையம் விளக்கம்
தூத்துக்குடியில் ஏற்பட்ட இந்த நிகழ்வு “அரிதினும் அரிதான நிகழ்வு” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு புருவம் உயர்த்தியிருக்கிறார் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். அதே சமயம் தூத்துக்குடியில் ஏற்பட்டது Tornadoவே இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் தான் டொர்னாடோ பாதிப்புக்கு பெயர் போனவை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் டொர்னாடோ ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று. அதீத வெப்பத்தால் மேலெழும்பும் தரைக்காற்று, மழைதரும் மேகக்கூட்டங்களின் குளிர்ந்த காற்றுடன் மோதும் போது, ராட்சத தூண் அல்லது தலைகீழான கூம்பு வடிவில் ஏற்படும் சுழற்காற்று தான் Tornado. மணிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் வேகம் வரை சுழன்று செல்லும் Tornado, சில மணித்துளிகளில் ஸ்திரமான கட்டிடங்களையே சிதறடிக்கக் கூடியது.

தூத்துக்குடியில் நடந்தது என்ன?
தூத்துக்குடியில் ஏற்பட்ட சுழற்காற்றும், இந்த அம்சங்களை ஒத்திருந்தாலும், அது உண்மையான Tornado இல்லை என்று தெரிவித்திருக்கிறது வானிலை மையம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் தென் தமிழகம் முழுவதும் கிழக்கு - மேற்கு திசை காற்றழுத்த பள்ளம் நிலவியதாகவும், அதனால் ஏற்பட்ட வானியல் மாற்றங்கள் காரணமாகவே இந்த சுழற்காற்று ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அது Tornado இல்லாமல், உள்ளூர் வெப்பச்சலனச் சுழல் (Localized Convective Vortex), தூசி சுழற்காற்று (Dust Whirl) அல்லது தற்காலிக புனல் மேகம் (Transient Funnel Cloud) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளது.