Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க 7 முறை படாதபாடுபட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதுபோல் ஒருவழியாய் 8ஆவது முறையாக தனது பிறந்த நாள் வாழ்த்தை கூறி அவையை கலகலப்பாக்கி உள்ளார். தனக்கு பிறந்த நாள் வாழ்த்துகூற போராடிய எம்எல்ஏ காமராஜின் செயலால் முதலமைச்சர் விஜய்யே முகம் நிறைய சிரிப்புடன் அமர்ந்திருந்த நிலையில் 8 முறை எழுந்து அமர்ந்தது நல்ல உடற்பயிற்சிதான் என சபாநாயகரும் தன்பங்குக்கு அவையை நகைச்சுவையாக மாற்றினார்.

தவெகவிற்கு ஆதரவு
களம்கண்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவுக்கரங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. அப்போது, அமமுக மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் தவெகதான் குதிரைபேரம் நடத்தி வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதத்தில் காமராஜ் என்பதற்கு பதிலாக காம்ராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
விளக்கமளித்த காமராஜ்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற அமமுகவிற்கு இது என்ன சோதனை? இருந்த ஒரு எம்எல்ஏவையும் காணவில்லையா? என பலரும் கூறி வந்த நிலையில், எம்எல்ஏ காமராஜ் காரில் இருந்தபடியே கையெழுத்து போடுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதற்கு விளக்கமளித்த காமராஜ், தவெக ஆதரவு கடிதத்தில் இருப்பது தன்னுடைய கையெழுத்தே இல்லை என பரபரப்பை கிளப்பினார்.

வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளார்
காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்திடும் வீடியோவை பார்க்கும்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பது போன்றுதான் உள்ளது, ஆனால் காமராஜூம், டிடிவி தினகரனும் மறுப்பு தெரிவிக்கிறார்களே என பலரும் குழம்பி நிற்க, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டபோது தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறி அரங்கிலிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தார் எம்எல்ஏ காமராஜ். இதனால், அதிர்ச்சியான டிடிவி தினகரன் காமராஜை கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார். இப்படி, சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பே தன்னைநோக்கி பலரையும் திரும்பி பார்க்க வைத்த எம்எல்ஏ காமராஜ், தமிழக சட்டமன்றத்தின் 17ஆவது கூட்டத்தொடரின் 3ஆவது நாள் கூட்டத்திலும் 17 நிமிடங்கள் பேசி முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அவையில் இருந்த அத்தனைபேரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளார்.

பிற உறுப்பினர்களும் குறுக்கீடு
முதலமைச்சருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்து என காமராஜ் பேச முற்பட, காவிரி பிரச்சினை குறித்து பேசுவதற்காக அவையிலிருந்த பிற உறுப்பினர்களும் குறுக்கீடு செய்தனர். அப்போது, வாய்ப்பு வழங்கப்படும் என உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூற, அதன்பிறகு காமராஜூம் பிறந்த நாள் வாழ்த்து என பேச ஆரம்பிக்க, மறுபடியும் உறுப்பினர்கள் குறுக்கீடு செய்ய ”அன்னைக்கு காலையில 6 மணி இருக்கும்” என்ற காமெடி டயலாக் போன்று இதுவே லூப்பில் நடந்து கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் வாழ்த்து
எப்படியோ 7 முறை சமாளித்த காமராஜ், கஜினி படையெடுப்பதுபோன்று 8 ஆவது முறைதான் வெற்றிகரமாக பேசவே ஆரம்பித்தார். மாண்புமிகு அவை உறுப்பினர்களே என சபாநாயகர் சமாளித்ததையும், மாண்புமிகு முதலமைச்சரே என காமராஜூம் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் வாழ்த்து சொல்ல போராடியதையும் கவனித்து கொண்டிருந்த முதலமைச்சரும் ஒருகட்டத்தில் சிரித்தேவிட்டார்.

நல்ல உடற்பயிற்சிதான்
அதன்பிறகு பேசிய எம்எல்ஏ காமராஜ், 8 முறை நான் பட்ட பாடிற்கு 5 நிமிடங்கள் கூடுதலாக பேச கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக்கூறினார். அதில் ஒரு நியாயம் இருந்ததால், மறுக்க முடியாமல் சபாநாயகரும் பேச அனுமதிதான் கொடுத்தார். பின்னர், மன்னார்குடி தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை சபாநாயகர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் காமராஜ். அப்போது,நேரம் முடிந்துவிட்டது என சபாநாயகர் கூற, தான் 8 முறை எழுந்ததாக கூறினார் காமராஜ். அதற்கு, எழுந்து அமர்வது நல்ல உடற்பயிற்சிதான் அதனால் வருத்தம் வேண்டாம் என சபாநாயகர் கூற, ஆனாலும் தான் பேச வேண்டிய அனைத்தையும் பேசி முடித்துவிட்டுதான் கீழே அமர்ந்தார் காமராஜ். மொத்தத்தில் அவையை தெரிந்தோ தெரியாமலோ நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் மாற்றி இருக்கிறார் காமராஜ்.