Also Watch
Read this
தமிழகத்தின் வீதி எங்கும் ஒரு நெகிழ்ச்சியான செய்தி காற்றின் வழி தவழ்ந்து வருகிறது. அந்தச் செய்தி வெறும் அரசாணை அல்ல; அது ஒரு குடும்பத்தின் பாசம், ஒரு சமூகத்தின் அரவணைப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புதிய அரசியலின் அடையாளம். ஆம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிதி ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாரணை தான் அது. உலகிலேயே மனிதனாகப் பிறப்பதே பெரிய விஷயம்; அதிலும் தமிழ் மண்ணில் பிறப்பது மிகப்பெரிய வரம் என்ற தத்துவத்தை முன்மொழிந்து, இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு 'தாய்மாமனாக' வந்து நிற்கிறார் முதலமைச்சர் விஜய்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜயின் கனவுத் திட்டமான தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், தமிழகத்தின் சமூக நல வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக மாற இருக்கிறது. தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் தங்கநகை அணிவிப்பது என்பது வெறும் சடங்கல்ல; அது ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் முதல் அங்கீகாரம், பாதுகாப்பு. அந்தப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்து, இன்று மாநிலத்தின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையே ஒரு குடும்பமாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

அரசு மருத்துவமனைகளில்...
தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் திட்டத்திற்கான திட்டமிடல் அதீத துல்லியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 9.42 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 54.3% பிரசவங்கள், அதாவது சுமார் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இந்த எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு தான், அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த தொகை போதுமானதா என்ற கேள்விக்குத் தரவுகள் மிகத் தெளிவான பதிலைத் தருகின்றன.

துல்லியமான கணக்கு
இதன்படி பார்த்தால், ஒரு குழந்தைக்குச் சராசரியாக 15,116 ரூபாய் முதல் 16,796 ரூபாய் வரை நிதி கிடைக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கிராம் 22 காரட் தங்க மோதிரத்தின் தற்போதைய சந்தை விலை சுமார் 14,500 - 15,000 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள தொகையானது, குழந்தையை வரவேற்கும் 'பேபி வெல்கம் கிட்' மற்றும் நிர்வாகச் செலவுகளுக்குத் துல்லியமாகப் பயன்படுத்தப்படும்.

பேபி வெல்கம் கிட்...
இது, வெறும் ஒரு கிராம் தங்கம் மட்டுமல்ல; ஏழை எளிய குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு அரண். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரத்துடன் வழங்கப்படும் 'பேபி வெல்கம் கிட்', ஒரு தாய் மற்றும் குழந்தையின் ஆரம்ப காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் குழந்தைக்கான ஆடைகள், ஊட்டச்சத்துப் பொருட்கள், பேபி சோப், ஆயில், பவுடர் மற்றும் கொசுவலை, தாய்மார்களுக்கான நாப்கின்கள் மற்றும் குழந்தையின் விளையாட்டிற்கான பொம்மைகள் என இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு தாய்க்கும் ஒரு கௌரவத்தையும், மகிழ்ச்சியையும் வழங்குகிறது.

மாற்றத்திற்கான விதை
கடந்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை சுமார் 18% வரை சரிவைக் கண்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வதே இதற்குக் காரணம். இந்தச் சூழலில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' ஒரு பெரும் மாற்றத்தை விதைக்கப் போகிறது. தங்க மோதிரம் மற்றும் முழுமையான பராமரிப்புப் பெட்டகம் என்ற இந்த ஊக்கத்தொகை, ஏழை எளிய மக்கள் மீண்டும் அரசு மருத்துவக் கட்டமைப்பை முழுமையாக நம்ப வழிவகை செய்கிறது. பொதுச் சுகாதாரக் குறியீடுகளில் தமிழகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

தாய் மாமன் சீர் சொல்லும் செய்தி
அரசு இந்தத் திட்டத்தை அறிவித்ததோடு நிறுத்தவில்லை. இதற்காகப் பி.ஐ.சி.எம்.இ (PICME) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இணைத்து, பயனாளிகளுக்குத் தடையின்றி இந்தச் சீர் போய் சேருவதையும் உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு மோதிரமும் 'BIS Hallmark' தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமாகக் கொள்முதல் செய்வதன் மூலம் விலைக் கட்டுப்பாட்டையும், தரத்தையும் அரசு தன் கையில் வைத்துள்ளது. 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த அன்பிற்குத் தகுதியானவர்கள்.

புதிய சமூக நீதியின் உதயம்
செப்டம்பர் 15, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முதல்வர் தன் கரங்களால் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும்போது, அது தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டின் விளக்காக ஒளிரும். நிதி ஒதுக்கீட்டில் துல்லியம், திட்டமிடலில் தீர்க்கம், செயல்பாட்டில் வேகம், இவைதான் தவெக அரசின் 'தாய்மாமன் சீர்' சொல்லும் செய்தி. இத்திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்து, பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் வலிமை கொண்டது. தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையைத் தங்கம் கொடுத்துத் தாலாட்டும் இந்தத் திட்டம், வெறும் அரசியல் வாக்குறுதி அல்ல; அது ஒரு புதிய சமூக நீதியின் உதயம்.