Also Watch
Read this
பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61ஆவது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், மனைவி மற்றும் மகள்களுடன் சென்று தாய் தந்தையிடம், அன்புமணி ஆசி பெற்றார். தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்ற பாமக தலைவர் அன்புமணியை, கட்டித் தழுவி ராமதாஸ் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் விட்டார். பெற்றோரின் திருமண நாளையொட்டி தாய்-தந்தையிடம் வாழ்த்துப் பெற்றதாக கூறிய அன்புமணி, இனி நல்லது நடக்கும் என கூறி உள்ளார்.

தேர்தலுக்கு முன்னர்...
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது, இரு அணிகளாக பாமக போட்டியிட்டது. தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் காரணமாக கட்சிக்குள் ஏற்பட பிளவால், எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெற முடியவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு, பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து வந்தார். அதேபோல் அன்புமணியை விமர்சிப்பதையும் அடியோடு நிறுத்தினார். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக அறிக்கை வாயிலாக குரல் கொடுத்தார். ராமதாசின் மூத்த மகளும், செயல் தலைவருமான காந்தியும் தனியாக அறிக்கை விடுத்து வந்தார்.

ஒதுங்கிய நிர்வாகிகள்
தைலாபுரம் தோட்டத்துக்கு தொடர்ந்து வருகை புரிந்த கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏ சேலம் அருள் உள்ளிட்ட நிர்வாகிகளும், ராமதாஸ் உடனான சந்திப்பை தவிர்த்தனர். ஒருங்கிணைந்த பாமகவால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என கருதி அவர்கள் ஒதுங்கி
இருந்ததாக கூறப்பட்டது.

ஆகஸ்ட் உடன் பாமக தலைவர் பதவி முடிவு
பாமகவை வலுப்படுத்த வேண்டுமென்றால், கிளை வாரியாக கட்சியினரை சந்தித்து பேச வேண்டுமென்ற கோரிக்கையை ராமதாசை சந்தித்த மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு, ‘கட்சியை மீட்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பேன் என்னுடன் இருக்கிறவர்கள் இருக்கலாம், போகிறவர்கள் போகலாம்’ என ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், பாமக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. ஏற்கெனவே பாமக யாருக்கு? என்பது தொடர்பான ஒருசில வழக்குகள் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து இவ்வழக்கில் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பெற்றோர் திருமண நாளில்...
இந்த நிலையில், ராமதாஸ்- சரஸ்வதி அம்மையாரின் 61ஆம் ஆண்டு திருமண நாள் இன்று ஜூன் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சபரிமலைக்கு மனைவியுடன் சென்று திரும்பியிருந்த அன்புமணி, தனது குடும்பத்தினருடன் தைலாபுரத்துக்கு 4 கார்களில் வருகை தந்து, ராமதாசை சந்தித்தார். அவருடன் மனைவி சவுமியா, மகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. அவரும், குழந்தையுடன் வந்திருந்தார். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

அரவணைப்பு, கண்ணீர்
நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் பார்த்த மகன் அன்புமணியை கட்டியணைத்து, ராமதாஸ் கண்ணீர் விட்டார். ராமதாஸ்-அன்புமணி சந்திப்பின்போது சௌமியா மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது பெற்றோர் காலில் விழுந்து வணங்கிய அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆசி பெற்றனர். சுமார் இரண்டரை மணி நேர சந்திப்பால், ராமதாஸ் -அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.