Also Watch
Read this
By: Manigandan Raja

நியூயார்க் நிக்ஸ் அணி கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு :
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் காயமடைந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 53 ஆண்டுகளுக்குப் பிறகு 'நியூயார்க் நிக்ஸ் ((New York Knicks))அணி தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதை தொடர்ந்து டைம்ஸ் சதுக்கத்தின் 42-வது தெருவில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.
அதிகாலை 2 மணிக்கு அளவில் கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த சிறுவனை மீட்க ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால், காவல்துறையினர் தங்கள் வாகனத்திலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துப்பாக்கியை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஒரே நாளில் சீனா, ஜப்பான், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் :

சீனா, ஜப்பான், இந்தோனேசியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதேபோல, சீனாவின் வடமேற்கே ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், ஜப்பானின் ஹோன்ஷு கிழக்கு கடற்கரை அருகே 6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சீனாவில், நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியான நிலையில், 4 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் :

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் வரும் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லூசெர்ன் ஏரிக்கு அருகே மலை பகுதியில் அமைந்துள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள்தான் இந்த இடத்தை முன்மொழிந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதில், ஈரான் முதன்மை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved