

பணம் வாங்கிய விவகாரத்தில்...
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை பகுதியில் சகோதரர்களான மாதேஷ், ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ள நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியிடம் கைமாற்றாக, ரமேஷ் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. கை நீட்டி வாங்கிய அப்பணத்தை கொடுக்காமல் ரமேஷ் இழுத்தடித்து வந்த ஆத்திரத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற கோவிந்தசாமி தகராறில் ஈடுபட்டதோடு, பெட்ரோல் நிரப்ப வந்த வாகனங்களை வழிமறித்து அடாவடி தனமும் செய்திருக்கிறார்.
அப்போது ஊழியர்களையும் விட்டு வைக்காத கோவிந்தசாமி, காது கூசும் கெட்ட வார்த்தைகளாலும், ஜாதியின் பெயரை வம்படியாக இழுத்தும் திட்டியதாக சொல்லப்படுகிறது.
காவல்துறையிடம் புகார்
அப்போது, ஊழியர்களை அடிக்க பாய்ந்த கோவிந்தசாமியும் மற்றும் அவரது கூட்டாளிகளும் தடுக்க முற்பட்ட பெண்களை கீழ் தரமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பங்க் ஊழியர் அருண்குமார் உள்ளிட்டோர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, புகார் கொடுத்த ஊழியர்களில் ஒருவரான அருண்குமாரை காணவில்லையென்றும், அவரை பங்க் உரிமையாளர் மாதேஷ் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் எஸ்.பி அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்து டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார்.
பங்க் ஊழியருக்கும் அதிமுக எக்ஸ் எம்.எல்.ஏ. கோவிந்தராஜுக்கும் இடையே உள்ள பிரச்சனையால் தனது கணவர் அருண்குமாரை பகடைக் காயாக உருட்டி விளையாடுவதாக மனைவி சுகன்யா குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ரமேஷிடம் இருக்கும் வரை தனது கணவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் காப்பாற்றி தர வேண்டுமென இரு கரம் கூப்பி மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
பங்க் ஓனர் சொல்லி கொடுத்ததன் பேரில் அருண்குமார் தங்களுடன் வரமறுப்பதாக அவரது தாய் கண்ணீர் விட்டு உருக்கமாக பேசினார்.
இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.