

காதலிக்க மறுத்த மாணவியின் ஒரு கை துண்டாகி, கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் தப்பி ஓடிய இளைஞர், காவலர்கள் மீதும் கற்கள் மற்றும் கட்டைகளை வீசி மீண்டும் மீண்டும் அடங்காமல் அராஜகத்தில் ஈடுபட்டதால் 6 முறை துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. என்ன நடந்தது?
இளைஞரின் காதலால்...
ஒரு தலைக்காதல் முத்தி, புத்தி மழுங்கிய இளைஞர் 10ஆம் வகுப்பு மாணவியின் கையை துண்டாக்கியதோடு, கைது செய்ய வந்த காவல்துறையிடமும் தனது முரட்டுத்தனத்தை காட்ட, கடைசியில் துப்பாக்கியின் தோட்டாக்கள்தான் அடக்கியது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராப்தாடு நகரில் உள்ளது ஜில்லா பரிசத் உயர்நிலைப்பள்ளி. இங்கு அய்யரவள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை 21 வயதான ஹேமந்த் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பலமுறை வழிமறித்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார் ஹேமந்த். ஆனாலும், அதனை ஏற்க மறுத்த மாணவி திட்டி அனுப்புவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
ஒரு தலைக் காதல், ஆத்திரம்
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி காலையில், மாணவி படித்து வரும் பள்ளிக்கு செயின்ஷா என்று சொல்லப்படும் மின்சார ரம்பத்துடன் சென்றுள்ளார். பள்ளிக்குள் ஏதேனும் மரவேலை பார்ப்பதற்காக வருகிறார் என சாதாரணமாக நினைத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் யாரும் இளைஞரை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், திடீரென வகுப்பிற்குள் சென்ற ஹேமந்த், மின்சார ரம்பத்தால் மாணவியின் கழுத்து, கை, வயிறு ஆகிய பகுதிகளில் கொடூரமாக அறுத்துள்ளார். இதில், மாணவியின் ஒரு கையே துண்டிக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அதேபோல், இளைஞரை தடுக்க போராடிய மற்றொரு மாணவிக்கும் படுகாயம் ஏற்பட்டது.
தப்பி ஓடிய கொடூரன்
வகுப்பில் இருந்த மாணவிகள் நாலாபுறமும் தெறித்து ஓட, ஹேமந்தின் மூர்க்கத்தனத்தால் அவர் அருகிலேயே செல்ல முடியாமல் அச்சத்தில் உறைந்த ஆசிரியர்கள் காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால், போலீசார் வருவதற்கு முன்பே ஹேமந்த் தப்பி ஓடினார். அடுத்து அங்கு வந்த போலீசார் மாணவிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வகுப்பில் இருந்த மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், இளைஞரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு
அதன்பிறகு சிசிடிவி காட்சி மூலம் இளைஞரின் அடையாளத்தை கண்ட போலீசார் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்மாவரம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஹேமந்த்தை இரவு 8 மணியளவில் காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, தப்பி ஓட முயன்றார். விரட்டி சென்ற காவலர்கள் மீது கற்கள் மற்றும் கட்டைகளையும் தூக்கி வீசி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் ஹேமந்த் பெரிய பெரிய கற்களை எடுத்து வீச, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கும் அசராமல் இளைஞர் எல்லைமீற 6 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர் காவல்துறையினர். அதன்பிறகே ஓட முடியாமல் இளைஞர் கீழே விழ, அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் போலீசாரின் துப்பாக்கிச்சூடும் பலரது மத்தியில் சரி என்ற நிலைப்பாட்டையே பெற்றுள்ளது.