ஏர்டெல் போஸ்ட்பெய்ட் கட்டணம் உயர்வு
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஒருபுறம் கட்டண உயர்வை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ள நிலையில், மறுபுறம் இலவச சர்வதேச ரோமிங் சலுகையையும் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளது.
போஸ்ட்பெய்ட் பிளான்
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் கட்டணங்களை அனைத்து திட்டங்களுக்கும் ஒரே அடியாக ரூ.50 வரை உயர்த்தியுள்ளது. இதன்படி, இதுவரை ரூ.449க்கு வழங்கி வந்த தொடக்க நிலை சிங்கிள் யூசர் போஸ்ட்பெய்ட் பிளான் இனி ரூ.499 ஆக மாறுகிறது. இதேபோல், ரூ.699 குடும்ப பிளான் ரூ.749 ஆகவும், ரூ.999 பிளான் ரூ.1,049 ஆகவும், ரூ.1,199 பிளான் ரூ.1,249 ஆகவும் மற்றும் ரூ.1,399 பிளான் ரூ.1,449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. 18%-யும் சேர்த்துப் பார்த்தால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணக் கணக்கில் சராசரியாக ரூ.59 கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இலவச சர்வதேச ரோமிங் சலுகை
இந்த கட்டண உயர்வுக்கு ஈடுசெய்யும் விதமாக, ஏர்டெல் நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை இலவச சர்வதேச ரோமிங் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளரும் ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாடு செல்லும்போது 5 நாட்களுக்கு 5 ஜிபி டேட்டா, 60 நிமிடங்கள் இலவச அழைப்புகள் மற்றும் இலவச மெசேஜ்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் சந்தை மதிப்பு ரூ.2,000 எனக் கூறும் ஏர்டெல், அடிக்கடி வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு இது மிகப்பெரிய லாபம் என்று தெரிவிக்கிறது. ஆனாலும், வெளிநாடு செல்லாத பெரும்பாலான சாதாரண பயனர்களுக்கு மாதம்தோறும் ரூ.50 முதல் ரூ.60 வரை கூடுதலாகச் செலவாவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தையில்...
போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியாவுடன் ஒப்பிடும் போது ஏர்டெல்லின் தொடக்க நிலை போஸ்ட்பெய்ட் திட்டம் சற்று அதிக விலையிலேயே தொடங்குகிறது. இருப்பினும், சிறந்த 5G வேகம், நெட்வொர்க் பாதுகாப்பு மற்றும் ஓடிடி சந்தாக்கள் போன்ற கூடுதல் சேவைகளை வழங்கித் தனது அதிகபட்ச கட்டணத்தை ஏர்டெல் நியாயப்படுத்தி வருகிறது. இதன் மூலம், தனது சராசரி கன்ஸ்யூமர் வருவாயை உயர்த்தி, பங்குச் சந்தையில் தனது நிதி நிலையைப் பலப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல்லின் டார்கெட்
இதன் பின்னணியில், தொலைதொடர்புச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் வியூகங்களும் மறைந்து உள்ளன. இந்தியாவில் 5G உள்கட்டமைப்புக்காகச் செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈடுகட்டவும், பிரீமியம் பயனர்களைத் தக்கவைத்துக் கொள்ளவுமே நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்குகின்றன. போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் வழக்கமாக அதிக வருவாய் ஈட்டித் தரும் பயனர்கள் என்பதால், அவர்களை மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறவிடாமல் தடுத்து, அதே வேளையில் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்குவதே ஏர்டெல்லின் டார்கெட்.
புதிய சலுகைகளை அறிவிக்குமா?
சர்வதேச ரோமிங் வசதியைக் காட்டி போஸ்ட்பெய்ட் கட்டணங்களை உயர்த்தி இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்லாத நடுத்தர குடும்பத்து போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இது கூடுதல் நிதிச் சுமையையே அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏர்டெல்லின் இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, போட்டியாளரான ஜியோ மற்றும் பிற நிறுவனங்களும் தங்கள் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை உயர்த்துமா அல்லது வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

