

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றதால் ஆதங்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் கேள்வி
ஆந்திராவில் சமீபத்தில் நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் நடைபெற்றது. சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சி தேர்தலில் 31 வது வார்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரசாத் ரெட்டி என்பவர் போட்டியிட்டார்.
தேர்தலில் பிரசாத் ரெட்டி தன்னை எதிர்த்த போட்டியிட்ட ஜனசேனா கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்து விட்டார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வட்டிக்கு பத்து லட்ச ரூபாய் பணம் வாங்கி வந்து ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுத்தேன்.
ஆனாலும் நான் தோல்வி அடைந்து விட்டேன். எனவே ஓட்டு போடுகிறேன் என்று என்னிடம் கைநீட்டி பணம் வாங்கியவர்களில் எனக்கு ஓட்டு போடாதவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும்.
பணத்தை திருப்பிக் கொடுக்க தவறினால் உங்கள் வீட்டுக்கு வந்து அங்கேயே உட்கார்ந்து சத்தியாகிரக போராட்டம் செய்து பணத்தை வாங்கி செல்வேன் என்று கூறி இருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே அல்லாது மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்கான தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்கிறது என்பதற்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சாட்சியாக அமைந்துள்ளது.