

கர்நாடகாவில் பிரதமர் மோடி...
பெங்களூருவில் பிங்க் லைன் மெட்ரோ சேவை, புதிய வந்தே பாரத் ரயில் சேவை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட 4 ரயில் நிலையங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட ரூ.15,600 கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நவம்பர்-13ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
நவீன கோளரங்கம் திறப்பு விழா
மைசூருவில் நவீன கோளரங்கத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காட்சி அரங்கத்தையும் பார்வையிட்டார்.
புதிய அத்தியாயம் தொடங்குகிறது
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. ரூ.15,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு, தொழில்துறைக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன.
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க...
இத்தகைய வளர்ச்சி வாய்ப்பு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும்போது, வறுமைக்கு எதிரான போராட்டம் வலுவடைகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் சுமார் 50 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போர், எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்தி உள்ளன. இந்த காலம் இந்தியாவுக்கும் சவாலானது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்த நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு உதவி உள்ளன.
முன்னேற்றப் பாதையில் இந்தியா
இன்று சூரிய ஆற்றல் முதல் பிற வளர்ந்து வரும் எரிசக்தி தீர்வு வரை, புதிய தொழில் நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் தற்போது 300 ஜிகாவாட் அளவை கடந்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களின் பலனாக மக்கள் தற்போது மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், அதை உற்பத்தி செய்பவர்களாகவும் மாறி வருகின்றனர். வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் எரிசக்திப் பாதுகாப்புடன் இணைப்பு வசதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யோகாவை பிரபலப்படுத்திய இந்தியா - பிரதமர்
பல உலகத் தலைவர்களின் மனைவியர் இந்தியா வந்து யோகா கற்றுக்கொள்கின்றனர். ஆசனங்களை பயில்வதில் கத்தார் அரச குடும்பம் உள்ளிட்டோர் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.