அண்ணாமலை ராஜினாமா ஏற்பு - காணொலியில் விளக்கம்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு உள்ளது.
பாஜகவில் இருந்து அண்ணாமலை...
பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்து இருந்தார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லி பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் அண்ணாமலை ஈடுபட்டார். தொடர்ந்து, ஜூன் ஒன்றாம் தேதி, டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்ணாமலையை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் தகவல் வந்தது.
பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் மோடியையும் சந்தித்து பேசிவிட்டு, தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக மக்களிடம் உரையாட உள்ளதாகவும் அண்ணாமலை கூறி இருந்தார்.
ராஜினாமா ஏற்பு
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அளித்திருந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அண்ணாமலை பதிவு
இந்த நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “இன்று ஜூன் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு, சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், எக்ஸ் தள கணக்குகளின் விவரங்களையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.

