தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 25ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
இதுதொடர்பாக, வானிலை மைய இயக்குநர் துரை கூறி இருப்பதாவது;
இன்று காலை 5:30 மணி அளவில், தென்மேற்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் வரும் 26ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை, தமிழகத்தில் பெய்ய வாய்ப்புள்ளது.
எம்ஜிஆர் நகரில்...
வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து சில இடங்களில் மிதமான மழையும் கனமழையும் பதிவாகி உள்ளது.
13 மாவட்டங்களில் கன மழை பதிவாகியுள்ளது. 15.4 சென்டி மீட்டர் அளவுக்கு, சென்னை எம்ஜிஆர் நகரில் மழை பதிவாகியுள்ளது
கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகப் பகுதியில் உருவாகி இருப்பதால், தென் தமிழக மாவட்டங்களுக்கும் டெல்டா பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை கொடுத்து உள்ளோம்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைவாக உள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கை கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் மூன்று நாட்களுக்கு...
சென்னையை பொருத்தவரை, அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு வரும் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்காக...
அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம்.
டெல்டா மாவட்டங்களில்...
அரபிக்கடல் பகுதியில் கடற்கரை மேற்பரப்பில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பொழுது, வட கிழக்கு காற்று அதிகமாக இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும்.
வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அதிகமாக இருக்கும்.
17ஆம் தேதி இயல்பை விட அதிகமாக, அதிக கன மழை பெய்தது. வட தமிழக பகுதிகளில் உருவான சுழற்சி வலு குறைந்ததால் 18ஆம் தேதி மழை இல்லை. இன்று இரவிலிருந்து தென் தமிழக பகுதிகளில் மழை பெய்யும்.
கணிப்பு வேறுபடுவது ஏன்?
வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநகராட்சி மழை மானி கணிப்பு வேறுபடும் நிலையில், அதை ஆய்வு செய்ய உள்ளோம். சோதனை செய்து வருகிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர் மழை மானிகளை ஆய்வு செய்து அது சரியானதா, இல்லையா என்று தெரிவிக்கட்டும்.
இவ்வாறு இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

