செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. முதலாவதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார். அதன்படி கடந்த ஒன்பது ஆண்டுகளில் செந்தில் பாலாஜியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகள் வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டிருப்பதாக கபில் சிபல் கூறினார்.
சட்ட விரோத பணப்பறிவர்தனை தொடர்பான விசாரணையின் போது நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியிடம் கேட்டதாக கபில் சிபல் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் உடல் நிலையை சுட்டிக்காட்டியும், வழக்கின் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் அமலாக்கத்துறையின் வசமிருப்பதை சுட்டிக்காட்டியும், ஆவணங்களையோ, சாட்சிகளையோ கலைக்க முடியாது என்பதை குறிப்பிட்டு கூறியும் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரினார் கபில் சிபல்.
இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால், செந்தில்பாலாஜி எங்கும் தப்பிச்செல்ல மாட்டார் என உத்தரவாதம் அளித்த மற்றொரு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வேண்டுமானால், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயார் என கூறி ஜாமீன் வழங்குமாறு வேண்டினார்.
பிறகு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில்பாலாஜி தரப்பில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது, வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது, வேலை வேண்டும் எனக்கோரி லஞ்சம் கொடுப்பவர்கள் வங்கி மூலமா பணம் கொடுப்பார்களா?, ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல,செந்தில் பாலாஜி அமைச்சராகவும், சமூகத்தில் சக்தி வாய்ந்தவராகவும் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஜாமீன் தரக்கூடாது என வாதிட்டார். இதையடுத்து இருதரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி,ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 20ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.
00 Comments
Leave a comment