

திமுக கவுன்சிலர்...
கழுத்தில் கையை போட்டு செல்லமாக குத்தியபடி போஸ் கொடுக்கும் அன்பில் மகேஷ், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதா? ஏற்கெனவே கைதாகிதான் செல்கிறேன்? மீண்டும் மீண்டும் ஏழரையை இழுத்தால் என்ன செய்வது? என தற்போது கோபத்தில் குத்தும் அளவுக்கு வார்த்தையை விட்டுள்ளார் திமுக கவுன்சிலர் சரவணன்.
அன்பில் மகேஷ் கைது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் DTCP அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்காக நள்ளிரவில் 12.30 மணியளவில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதுகுறித்து ஏற்கெனவே தகவல் அறிந்து சிறைக்கு முன்புகூடிய திமுகவினர் போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அதோடு, அன்பில் மகேஷை அழைத்து செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதமும் செய்தனர். அத்தனையையும், சமாளித்து அன்பில் மகேஷை சிறைக்குள் அழைத்துச் சென்றனர் காவல்துறையினர்.
சிறை வாசலில் ஒலித்த குரல்...
அப்போது, சிறை வாசலில் இருந்து ஒருவரது குரல் மட்டும் தனியாக ஒலித்து அனைவரையும் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க வைத்தது.
‘தலைவரே, அன்றைக்கே கரூரிலேயே முடித்து விட்டிருந்தால் இன்றைக்கு நமக்கு இந்த நிலை வந்திருக்குமா?’ என ஆவேசமாக கத்தினார்.
முதலமைச்சருக்கே பகிரங்க மிரட்டல் விடுப்பதுபோன்று பேசிய அந்த நபர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், 3 தனிப்படை அமைத்து தேடியும் வந்தனர்.
யார் இவர்?
மிரட்டல் விடுத்த அந்த நபரின் குரல் பதிவையும், அன்பில் மகேசுடன் நெருக்கமானவர்களின் குரல் பதிவுகளையும் திரட்டி தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார், வேலூர் மாநகராட்சியின் 12ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் தான் சிறை வளாக வாசலிலேயே எல்லைமீறினார் என்பதை கண்டுபிடித்தனர்.
காட்பாடி திருநகர் சிந்து கார்டனில் வசித்து வரும் டீட்டா சரவணன், தி.மு.க.வில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறார். இதுமட்டுமல்லாது, அன்பில் மகேஸின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார். அதிலும், சில முக்கிய நிகழ்ச்சிகளில் டீட்டா சரவணன் அன்பில் மகேசுடன் நெருக்கமாகவே காணப்படுவார்.
தலைமறைவான கவுன்சிலர்
இந்நிலையில் தான், டீட்டா சரவணனை கைது செய்வதற்காக வேலூருக்கு விரைந்தனர் காவல்துறையினர். ஆனால், முன்கூட்டியே தகவலறிந்து உஷாராக டீட்டா சரவணன் தலைமறைவாகிவிட்டார்.
’சிறை வாசலில் வாய்கிழிய சவடால்விட்ட டீட்டா சரவணன் ஏன் போலீசாருக்கு டாட்டா காட்ட வேண்டும்? தைரியமான ஆள்தானே தானாகவே வந்து போலீசில் சரணடையலாமே? ஏன் காவல்துறையை அலைய வைக்க வேண்டும்?’ என தவெகவினர் விமர்சித்துள்ளனர்.
கைதான சரவணன்
இந்த நிலையில், அன்பில் மகேஷ் கைதின் போது சர்ச்சைக்குரிய வகையில் முழக்கமிட்ட வேலூர் திமுக கவுன்சிலர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
செல்போனை பெங்களூருவுக்கு அனுப்பிவிட்டு, விழுப்புரத்தில் பதுங்கி இருந்தவரை காவல்துறை கைது செய்துள்ளது.