தமிழ்நாடு

பாட சந்தேகங்களை கூச்சப்படாமல் ஆசிரியர்களிடம் கேட்க வேண்டும் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை | Anbil Makesh Poyyamozhi


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் திருவரங்கம் தொகுதியில் 67'ஆவது ஆய்வை மேற்கொண்டார். நாடு விடுதலை அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருவரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "உங்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்வதை கவனம் மாறாமல் கேளுங்கள். இந்த வயது படிப்பதற்கானது. பொதுத்தேர்வு, பருவ தேர்வு என நிறைய உள்ளது. அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். பொதுத்தேர்வை பயம் பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும்.

வகுப்புகளில் எழும் சந்தேகங்களை துணிந்து வெட்கப்படாமல், கூச்சப்படாமல் கேட்க வேண்டும். ஏனெனில் அதற்கு தான் பள்ளிக்கு வருகிறீர்கள். எல்லாருக்கும் எல்லாமும் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்கு தெரிந்தது இன்னொருவருக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் நீங்கள் எந்த சந்தேகமாக இருந்தாலும் ஆசிரியர்களிடம் எனக்கு புரியவில்லை சொல்லிக் கொடுங்கள் என கேளுங்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுத்தேர்வுக்கு கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் என்னவாக ஆகிறீர்களோ அதை பொறுத்து தான் பிற மாணவர்களுக்கும், உங்களை தயார் செய்த ஆசிரியர்களுக்குமான மதிப்பு இருக்கும்.

தேர்வுக்கு இன்னும் 8 லிருந்து 9 மாதங்கள் தான் இருக்கும். அதை எதிர்கொள்ள கடினமாக உழையுங்கள். நீங்கள் அடுத்து என்ன கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதை இப்போது தேர்வு செய்யுங்கள். தேர்வு முடிந்த பிறகு முடிவு செய்யாமல் இப்போதே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு எடுங்கள்", என அறிவுரை வழங்கினார்.

பின்னர் பள்ளியின் மேம்பாட்டிற்கு நிர்வாகத்தினர் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து தனது திருவெறும்பூர் தொகுதி பழங்கனாங்குடி ஊராட்சியில் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" விண்ணப்ப படிவம் அளிப்பதற்கான சிறப்பு முகாமினைப் பார்வையிட்டார்.

00 Comments

Leave a comment