உயர்மட்ட காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பா?
உயர்மட்ட காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பா?

மெத் விவகாரத்தில் அடுத்தடுத்து அப்டேட், சிக்கிய காவலர்கள்

வேளாங்கண்ணி டிஎஸ்பி கார் ஓட்டுநர், ஒரு பெண் காவலர் என 2 காவலர்கள் கையூட்டு பெற்றதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்
Published on: 

நாகையில் ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர்
சிறையில் இருக்கும் நிலையில் வேளாங்கண்ணி டிஎஸ்பியின் கார் ஓட்டுநர், ஒரு பெண் காவலர் என 2 காவலர்கள் கையூட்டு பெற்றதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில்...
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், ராமநாதபுரத்தில் மெத்தபெட்டமைன் விற்றவர்கள், வாங்கியவர்கள், தயாரித்தவர்கள், தயாரிக்க லேத் பட்டறை கொடுத்தவர் என கொத்தாக 9 பேரை தூக்கிய போலீசார் அதன் பின்னால் உள்ள மொத்த நெட்வொர்க்கையும் வேரோடு தோண்டும் வேலையிலும் இறங்கினர்.

இதனிடையே போதைப்பொருள் மேக்கரான சாகுல் ஹமீதின் செல்போன் மூலம் சுகன் என்பவர் சிக்க, அவரது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 137 கிலோ மெத்தபெட்டமைன் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது.

வேளாங்கண்ணியில் லாட்ஜ்ஜை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த சுகன், அவரது நண்பர்களான மணிகண்டன், பிரதாபராமபுரம் சதீஷ்குமார் ஆகிய 3 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடந்தது.

வழக்கறிஞர் பூபாலன்...
இதில் தான், தவெக நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் தான் அவர்களுக்கு ஹெட் என்பதே தெரியவந்தது. அடுத்து, தவெக நிர்வாகியோடு சேர்த்து 4 பேரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.

இதனை தொடர்ந்து பூபாலனின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அதில், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் உள்ள 3 போலீசாரின் செல்போன் எண்களில் இருந்து அடிக்கடி பூபாலனுக்கு அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. இதனால், போதை பொருள் கடத்தலில் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? அவர்கள் ஏன் பூபாலனை அழைக்க வேண்டும்? என சுங்கத்துறை அலுவலகத்திற்கு 3 பேரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

காரில் கடத்தல்...
இதுஒருபுறமிருக்க, சுகனின் நண்பரும் பைனான்சியருமான ராஜ்குமார் வேளாங்கண்ணியில் லாட்ஜ் லீசுக்கு நடத்தி வருவதாகவும், அவரது காரில் தான் மெத்தபெட்டமைன் கடத்தப்படுவது வழக்கம் என்றும் அதிகாரிகளுக்கு நம்பகமான ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ராஜ்குமாருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

ஆனால், சம்மனையே பெறாமல் ராஜ்குமார் தலைமறைவாகியதால் அவரை தேடும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது.

சிக்கியது டைரி
அதேநேரம், ராஜ்குமாரின் குயின்ஸ் பேலஸ் லாட்ஜில் மேற்கொண்ட ஆய்வில் டைரி ஒன்று கையில் சிக்க, வழக்கு அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.

மெத்தபெட்டமைன் விவகாரத்தை மூடிமறைக்க வேளாங்கண்ணி டிஎஸ்பியின் ஓட்டுநர் சிவாவிற்கும், பெண் காவலர் சங்கீதாவிற்கும் குறிப்பிட்ட தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது.

காவலர்கள் இடமாற்றம்
மெத் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சுகனின் ஊரான பிரதாபராமபுரம்தான் சிவாவிற்கும் சொந்த ஊர். அதேபோல், ராஜ்குமார் நடத்திவரும் லாட்ஜில் பினாமி பெயரில் காவலர் சங்கீதாவும் சைலண்ட் பார்டனர் எனவும் கூறப்படுகிறது. டைரியில் உள்ள ஆதாரம் அடிப்படையில் காவலர்கள் இருவரையும் தஞ்சாவூருக்கு பணியிடமாற்றம் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை வளையத்தில்தான் வைத்துள்ளனர்.

அதிகாரிகள் சிக்குவார்கள்?
இதனிடையே, வேளாங்கண்ணி டிஎஸ்பியின் வாகனத்தை சிவா ஓட்டி வந்துள்ளதால் உயர்மட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

அதேபோல், பூபாலனுக்கு அடிக்கடி போன் செய்த அந்த 3 காவலர்கள் யார்? அதனையும் வெளியிட்டால்தான் இந்த விவகாரத்தில் மேலும் தெளிவு கிடைக்கும். கூடியவிரைவில் வேளாங்கண்ணியை சேர்ந்த பல காவல் அதிகாரிகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்குவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

newstamil.tv