முதல்வர் விஜய் பற்றி அவதூறு பேச்சு, கவுன்சிலருக்கு சம்மன்
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர், முதலமைச்சர் விஜய்யை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசிய நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த திமுக எம்பி கனிமொழி, அநாகரிக பேச்சை மேடையிலேயே கண்டித்ததோடு, "எதிராளிகள் எவ்வளவு இழிவாக பேசினாலும் பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் நாம் நமது கண்ணியத்தை இழந்து விடக் கூடாது," என திமுகவினருக்கு அறிவுரை கூறினார்.
முப்பெரும் விழா...
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா, ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் எம்பி முகமது அப்துல்லா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்ச்சையான கவுன்சிலர் பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளரும், வில்லிவாக்கம் பகுதி கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதலமைச்சர் விஜய்யை ஏக வசனத்திலும், இழிவாகவும், பிணம் என தரக்குறைவாகவும் பேசினார்.
கண்டித்த கனிமொழி
அவர் பேசப் பேச முகம் சுழித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, மேடையில் உடன் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து இதெல்லாம் என்ன பேச்சு என்பது போல் சைகை காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய கனிமொழி, அநாகரிக பேச்சை மேடையிலேயே கண்டித்தார்.
அமைச்சர்கள் கண்டனம்
திமுக கவுன்சிலர் சுதாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த வீடியோவை தவெக நிர்வாகி அருண் விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரவே, விவகாரம் பற்றிக் கொண்டது.
இதைக் கண்ட அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி, கீர்த்தனா ஆகியோர் சுதாவின் பேச்சுக்கும் திமுக தலைமைக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதைத் தொடர்ந்து, தவெக துறைமுகம் பகுதி செயலாளர் உதயகுமார், பூக்கடை காவல் மாவட்டம் B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்த துறைமுகம் பகுதி செயலாளர் முரளி ஆகியோர் மீது புகார் அளித்தார். இதன் பேரில், இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுன்சிலருக்கு சம்மன்
95ஆவது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயக்குமார் கொடுத்த புகாரில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதித்தல், பொதுமக்களிடையே பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல் என 3 பிரிவுகளின் கீழ் பெண் கவுன்சிலர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக கவுன்சிலருக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.

