இந்தியா

பிடிவாதம் பிடிக்கும் பிசிசிஐ... சுவாரஸ்யத்தை இழக்கும் ஆசிய கோப்பை..| Asia Cup

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒரு போருக்கு சமமான போட்டி. களத்தில் அனல்பறக்கும் போட்டியை காண்பதும், இந்த போட்டி தான் அதிக பார்வையாளர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டது என்ற வரலாறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு உண்டு. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் தனது சொந்த மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது மும்பை தாக்குதலுக்கு பின் முடியாத நிகழ்வாகவே தொடர்கிறது. ஐசிசி போட்டி தொடர்களை தவிர மற்ற தனிப்பட்ட தொடர்கள் நடக்காமலேயே இருந்து வருகிறது. இதுவே சோகம் என்றால் இந்த சோகத்தை ஏமாற்றமாக்கியிருக்கிறது பிசிசிஐ.
 

பாகிஸ்தானில் இந்தியா ஆடாது என முடிவெடுத்தபிறகு இந்தியா ஆடும் போட்டிகளை இலங்கை, துபாய், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒரு நாட்டில் நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில் எந்த அடிப்படையில் இலங்கை தேர்வு செய்யப்பட்டது என்பதே புரியாத புதிராக உள்ளது.

இலங்கையில் இது பருவமழைக்காலம் என்பது கூட தெரியாமலா போட்டித்தொடர் திட்டமிடப்பட்டது. இலங்கை ஆப்கானிஸ்தான் இடையேயான க்ரூப் போட்டி லாகூரில் நடந்தது. ஆனால் இந்தியா தனது எல்லா ஆட்டங்களையும் இலங்கையிலேயே ஆடுகிறது. இந்தியா மட்டும் தான் ஒரே நாட்டில் அனைத்து போட்டிகளையும் ஆடும் அணியாக உள்ளது மற்ற எல்லா நாடுகளுமே இரண்டு நாடுகளுக்கும் பயணித்து போட்டியில் ஆடியது.

 

இப்படி கிரிக்கெட்டில் பணம் கொழிக்கும் வாரியமாக பிசிசிஐ இருப்பதால் தனக்கேற்ப போட்டிகளை மாற்றிக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதிய க்ரூப் ஸ்டேஜ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது, அதே க்ரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மோதிய போட்டியில் மழை குறுக்கிட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டு 23 ஓவரில் இந்தியா 145 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்தியா போட்டியை வென்றது. க்ரூப் ஸ்டேஜில் தான் இந்தநிலை என்றால் சூப்பர் 4 சுற்ரில் இன்னும் மோசம் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழையால் ரிசர்வ் டே எனப்படும் மாற்று நாளுக்கு சென்றது. அதாவது முதல் நாளில் 24 ஓவர்களையும், அடுத்த நாளில் 26 ஓவர்களையும் இந்தியா ஆடியது. பிறகு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆவதற்குள் 4 முறை மழை குறுக்கீட்டுள்ளது. இதனால் ஓய்வு நாளை இழந்த இந்திய அணி மறு நாளே இலங்கையுடன் ஆடியது அந்த போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்தது. இப்படி மழைக்கு நடுவே அவ்வப்போது போட்டி நடந்து வருகிறது.

இறுதிப்போட்டியும் இலங்கையில் தான் என்பதால் மழை குறுக்கிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த போட்டியும் ரிசர்வ் டேவுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உலகக் கோப்பை வரவுள்ள நிலையில் வீரர்கள் இப்படி ஓய்வில்லாமல் ஆடினால் அவர்களை பாதிக்காத என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இந்தியா ஆட முடியாது என தெரிவித்ததை போல வங்கதேசமோ, நேபாளோ, ஆப்கானிஸ்தானோ தெரிவித்திருந்தால் இந்த வசதியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செய்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

வர்த்தக ரீதியாகவும், ஒளிபரப்பு ரீதியாகவும் வெற்றி என்றாலும் போட்டியை கண்டு ரசிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பாதி நேரம் கவர்களால் மூடப்பட்ட மைதானத்தை பார்ப்பது ஏமாற்றைத்தையே தருகிறது என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

00 Comments

Leave a comment