இன்றைய உலக செய்திகள்
கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து விபத்து :
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில், 14 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கே.பி.சர்மா ஒலியை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல் :
நேபாள முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, 3-வது நாளாக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நயா பனேஸ்வர் பகுதியில் கூடிய ஆதரவாளர்கள், சர்மா ஒலியை உடனடியாக விடுதலை செய்யும் படியும், பழிவாங்கும் அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் படியும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து இலவசம் :
எரிபொருள் விலை உயர்வால் ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போர் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 160 ரூபாய் வரையும், அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாகவும் உயர்ந்துள்ளது.
இதனால் விக்டோரியா, தாஸ்மேனியா மாகாணத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரயில், டிராம், பஸ், படகு உள்ளிட்ட பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது.
பதவியை ராஜினாமா செய்த மியான்மர் ராணுவ தளபதி :
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு, அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ தளபதி மின் ஆங் லயிங், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிபராக பதவியேற்கும் முடிவில் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

