ஒரு வீடியோ கேம் வெளியாவதற்காக உலகமே இப்படி பரபரப்பாக காத்திருப்பது இதுதான் முதல் முறை. ஆபீஸ்களுக்கு விடுமுறை, பல பில்லியன் டாலர் வணிகம், இளைஞர்களின் கொண்டாட்டம் என களைகட்டிய இந்த GTA 6 FEVER, தற்போது டெல்லி அரசியலிலும் பரவியிருக்கிறது.
பரபரப்பான உலக அரங்கில்...
’இன்னிக்கு ஆபீஸ் கிடையாது, எல்லாரும் வீட்டுல உக்காந்து கேம் விளையாடுங்க’ - நவம்பர் 19 அன்று உலகம் முழுக்க பல கார்ப்பரேட் அலுவலகங்களில் கேட்ட சத்தம்தான் இது. காரணம், ஒற்றை வீடியோ கேம் GTA 6. ஒரு சினிமா ரிலீஸுக்கு தியேட்டர் வாசலில் பாலாபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம்.
ஆனால், ஒருவீடியோ கேம் வெளியாவதற்காக உலகமே ஸ்தம்பித்து நிற்பதும், அதை இந்திய பிரதமர் மோடி தன்னுடைய அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும், அதற்கு காங்கிரஸ் நக்கலாக கவுன்ட்டர் கொடுப்பதும்தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.
அமெரிக்காவின் ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் 1997ல் தொடங்கிய Grand Theft Auto சாம்ராஜ்யத்தின் லேட்டஸ்ட் அவதாரம் தான் இந்த GTA 6. இதற்கு, முந்தைய பாகமான GTA 5 வெளியானது 2013ல். சுமார் 13 வருட தவத்திற்கு பிறகு அடுத்த பாகம் வெளியாகியிருப்பதால், இளைஞர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இது வழக்கமான சுட்டு தள்ளும் கேம் கிடையாது. ஓபன் வேர்ல்ட் எனப்படும் திறந்தவெளி மாய உலகம். புளோரிடா மாகாணத்தை அடிப்படையாக கொண்ட கற்பனை பகுதியான லியோனிடா மற்றும் வைஸ் சிட்டி-க்குள் நாம் ஒரு கதாபாத்திரமாகவே வாழலாம்.
கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது, கடைகளுக்கு செல்வது, போலீஸிடம் சிக்குவது, தப்பிப்பது என ஒரு ஹாலிவுட் ஆக்சன் படத்திற்குள் நாமே இறங்கி ஆடுவது போன்ற அனுபவம். இந்த முறை லூசியா மற்றும் ஜேசன் என்ற இரண்டு குற்ற பின்னணி கொண்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கை, உறவு, பணத்துக்கான போராட்டத்தை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது.
சம்பளத்துடன் விடுமுறை
அன்று GTA 5 விளையாடி வளர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று IT கம்பெனிகளிலும், கார்ப்பரேட் ஆபீஸ்களிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக பல நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய கேமிங் விடுமுறையை அறிவித்திருக்கிறது.
ஜப்பானின் பாக்கெட்பேர் நிறுவனம் நவம்பர் 19 முதல் 23 வரை 5 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. உலகளாவிய நிறுவனமான லாஜிடெக், தனது 7 ஆயிரம் ஊழியர்களுக்கு Logi Game Day என்ற பெயரில் லீவு கொடுத்திருக்கிறது.
சென்னையிலும் விடுமுறை
சென்னையிலும் இந்த காய்ச்சல் தொற்றிக்கொண்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த Inde by ChairsCarte நிறுவனத்தின் நிறுவனர் கிஷோர் சண்முகம், தனது 26 ஊழியர்கள், பயிற்சியாளர்கள், ஃப்ரீலான்ஸர்கள் என அனைவருக்கும் நவம்பர் 19 அன்று விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதேபோல இன்ஃப்ளூயிஷ் நிறுவனம் 50 ஊழியர்களுக்கும், போட் நிறுவனம் விருப்பத்தின் அடிப்படையிலும் விடுமுறை வழங்கியுள்ளன.
டெல்லியில் இருந்து அரசியல் ட்விஸ்ட்
கேமிங் உலகம் இப்படியொரு கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, நவம்பர் 19 அன்றே யாரும் எதிர்பார்க்காத ஒரு அரசியல் ட்விஸ்ட் டெல்லியிலிருந்து வந்தது. பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் GTA 5, GTA 6 ஆகியவற்றை ஒப்பிட்டு 10 ஸ்லைடுகள் கொண்ட பதிவை வெளியிட்டார். India is playing a whole new game என்ற தலைப்பில் வெளியான அந்த பதிவில், 2013 காங்கிரஸ் ஆட்சியில் பலவீனமான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, 2026 பாஜக ஆட்சியில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியிருப்பதாக ஒப்பிட்டிருந்தார்.
மேலும், வறுமை ஒழிப்பு, கழிப்பறை வசதிகள், சூரிய மின்சார உற்பத்தி, ரயில்வே மின்மயமாக்கல், ஸ்டார்ட்அப்கள் என பல துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை பட்டியலிட்டு, இளைஞர்களின் பல்ஸை பிடிக்க முயன்றார் பிரதமர்.
பதில் தந்த காங்கிரஸ்
ஆனால், உடனே களத்தில் இறங்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்தார். இளைஞர்களை கவர்வதற்காக பிரதமர் மோடி GTA 5, GTA 6 படங்களை பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால், இந்த விளையாட்டின் கதையே குற்றச் செயல்களில் ஈடுபடும் 2 கதாபாத்திரங்களை சுற்றித்தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விளையாட்டைப் பிரதமர் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது என்று நக்கலாக பதிவிட்டு, பாஜகவை வம்பிழுத்தார் ஜெய்ராம் ரமேஷ்.
பல பில்லியன் டாலர் வணிகம், தொழில்நுட்ப மிரட்டல் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வீடியோ கேம் என்பது இன்று உலக இளைஞர்களின் கலாச்சாரமாகவும், நிறுவனங்களின் ஊழியர் நலன் சார்ந்த முடிவாகவும் மாறியிருக்கிறது.
அதையும் தாண்டி, இளைஞர்கள் எங்கே கூடுகிறார்களோ, அங்கே நாமும் இருப்போம் என்ற அரசியல் கணக்கோடு பிரதமர் மோடி காய் நகர்த்த, அதே கேமின் கதைக்களத்தை வைத்தே காங்கிரஸ் கவுன்ட்டர் கொடுத்திருப்பதுதான் சுவாரஸ்யம்.
வீடியோவைக் காண...